ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்றத்தில் மனு!
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, அமலாக்கத்தையினர் ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை, 3 ஆயிரம் பக்கத்திலான ஆவணங்களை டிரங்கு பெட்டியில் கொண்டு வந்து தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து புழல் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட அவர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் முறையீடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com