கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மகள் திருமணம் திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கத்தில் நடைப்பெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது பேசிய ஸ்டாலின், “நம்முடைய நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் எல்லோரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடிய ஒரு நல்ல பண்பாளர். பாராளுமன்றத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள், தொழிலாளர் பிரச்னைகள் குறித்து குரல் கொடுத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று தந்தவர் எம்.பி செல்வராஜ்.
அவருடைய இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். நமது தலைவர் கருணாநிதி, `நான் தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் என் வாழ்வில் சந்திக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்திருப்பேன்’ என்று என்னிடம் அடிக்கடி கூறுவார். அந்த அளவிற்கு கம்யூனிஸ்ட் இயக்கங்கள்மீது எனக்கு தனி பற்று உண்டு. தற்போது இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தி.மு.க-விற்கும் இடையே உள்ள கூட்டணி வெறும் தேர்தலுக்கான கூட்டணி மட்டும் அல்ல. இது கொள்கைக்கான கூட்டணி மக்கள் நலன் காக்கும் கூட்டணி.
நான் இதே மேடையில் உங்களுக்கு உறுதியோடு கூறுகிறேன், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும், தொடரும். வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஏதோ ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறக்கூடிய தேர்தல் அல்ல. இது தற்போது மத்தியில் ஆளக்கூடிய சனாதன, பாசிச வெறிபிடித்த பா.ஜ.க-விடமிருந்து இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான ஒரு தேர்தல். இந்த தேர்தலின் மூலம் பா.ஜ.க-விற்கு இந்திய நாட்டில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்திய நாட்டை காப்பாற்றுவதற்காகத்தான் இந்தியா என்கிற கூட்டணி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்து, தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டீர்கள். அதேபோல நம்முடைய இந்திய நாட்டையும் காப்பாற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும். மத்தியிலே ஆளக்கூடிய ஒன்றிய அரசாங்கம் கடந்த 9 ஆண்டுகளில் என்னென்ன நலத்திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளது என்பதை அவர்களால் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.
ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியினால் இந்த மூன்று வருடத்தில் எத்தனையோ நலத்திட்டங்களை மக்களுக்காக நாம் கொண்டு வந்துள்ளோம். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, `வெளிநாடுகளிலுள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டு, இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன்’ என்றார். ஆனால் இதுவரை 15 ரூபாய்கூட போட்டதாகத் தெரியவில்லை. நாட்டில் உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கி தருவதாக கூறினார்.
ஆனால் இருக்கிற வேலைகள் எல்லாம் தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு நாட்டு மக்களை நெருக்கடியில் விட்டு விட்டார். மதத்தை வைத்து இந்திய நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி இந்த நாட்டையே பிளவுபடுத்துவதற்கு மோடி அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்ற தான் `இந்தியா’ என்கிற வலுவான கூட்டணி அமைந்துள்ளது. இது பிரதமர் மோடிக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது, அதனால்தான் இந்தியாவில் எங்கு பொதுக்கூட்டத்திற்கு சென்றாலும் தி.மு.க-வை பற்றியும், தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக நடைபெறுவதாகவும் பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஊழலை பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை இருக்கிறது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு, மோடிக்கு யோக்கிதையே கிடையாது. அவருடைய ஊழலை எல்லாம் சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. கிட்டத்தட்ட ஏழு திட்டங்களில், ஒன்றிய மோடி அரசாங்கம் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து, மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளது. ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு என்ற திட்டத்தின் பெயரில் இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கி பல கோடி ரூபாய் மக்கள் பணம் திருடப்பட்டுள்ளது.
இதை தி.மு.க சொல்லவில்லை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய சி.ஏ.ஜி-யின் அறிக்கைதான், மோடி அரசாங்கம் ஊழல் செய்திருப்பதாக கூறி உள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய 600 சுங்கச்சாவடிகளில் பல கோடி ரூபாய் வாகன ஓட்டிகளிடம் இருந்து திருடப்பட்டுள்ளது. குறிப்பாக சி.ஏ.ஜி, இந்திய நாட்டில் ஐந்து சுங்கச்சாவடிகளை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பரனூர் சுங்கச்சாவடியும் ஒன்று. அந்த ஒரு சுங்கச்சாவடியில் மட்டுமே ஆறரை கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளது.
மோடி மட்டுமல்ல அமித் ஷாவும், நாட்டில் ஊழல் பற்றி அதிகம் கவலைப்பட்டு எல்லா கூட்டங்களிலும் பேசுகிறார். ஆனால், அவருடைய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பலர்மீதே ஒரு லட்சத்திற்கும் மேலான, ஊழல் புகார்கள் வந்திருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்புத்துறை அறிக்கை சொல்கிறது. பல துறைகளில் கிட்டத்தட்ட ஏழரை லட்சம் கோடி ரூபாய் வரை, மக்களின் பணத்தை திருடிவிட்டு மோடியும் அமித் ஷாவும், தி.மு.க ஊழல் செய்கிறது என்று குற்றம்சாட்டி வருகிறார்கள்.
எப்படி 2021 சட்டமன்றத் தேர்தலில் நல்லதொரு தீர்ப்பைத் தந்து, திராவிட மாடல் ஆட்சிக்கு வாக்களித்தீர்களோ, அதேபோல வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், இந்தியா கூட்டணி வெற்றி பெற நாம் அனைவரும் உறுதி ஏற்று பாடுபட வேண்டும். அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் வைத்துக்கொண்டு ஒன்றிய அரசாங்கம் தி.மு.க-வை மிரட்ட நினைக்கிறது. ஆனால், தி.மு.க ஒரு பனங்காட்டு நரி, பா.ஜ.க-வின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் தி.மு.க என்றைக்கும் அஞ்சாது அடிபணியாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com