மகாத்மா காந்தி பிறந்தநாளில் தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. இந்த நிலையில். காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கிராமசபைக் கூட்டத்தில் உரையாற்றினார். அதில் பேசிய அவர், “ஜனநாயகத்தின் தொட்டில் தமிழ்நாடு. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில்தான் குடவோலை முறை இருந்ததாக வரலாறு சொல்கிறது. மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். மக்களே நேரடியாக விவாதித்து, தங்களின் தேவையைப் பேசி தீர்த்துக்கொள்ளும் வகையில் கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்ததினமான இன்று, தமிழகம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகுதான் கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. முறையாக தடங்கலின்றி கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். கிராமப்புற மக்களின் குரல் எப்போதும், எந்த சூழலிலும் தடையின்றி ஒலிக்க வேண்டும். வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில் கிராமங்களே முன்னிலை வகிக்கின்றன. கிராம அளவில் கிராமசபைக் கூட்டம் மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாகச் செயல்படுகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களும் வளர்ச்சி பெற வேண்டும். கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ரூ.1,000-லிருந்து ரூ.5,000-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தி.மு.க அரசுதான். கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை அங்கீகரித்தல், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல், ஊராட்சிகளின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்தல், பயனாளிகளைத் தேர்வு செய்தல், திட்டக் கண்காணிப்பு செய்தல் ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கிராமசபைகள் நலிந்தோர்க்கும், வறியோர்க்கும் உதவி செய்ய, மாற்றுத்திறனாளிகள் நலன், முதியோர் நலன், குழந்தைகள் நலன் போன்றவற்றில் அதீத ஈடுபாடு காட்டிட வேண்டும். கல்விக்காக நம்முடைய அரசு எடுக்கிற முயற்சிகள் எல்லாவற்றிலும் கிராமசபைகள் முக்கியப் பாலமாக இருக்க வேண்டும். இன்றைக்கு கிராமசபையில் பங்கெடுத்த நீங்கள், பங்கேற்காத உங்கள் ஊர் மக்களிடம் போய் சொல்லுங்கள், கிராமசபையை ஓர் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றக் களமாகக் கருதி கலந்துகொள்ள வேண்டும் என்று.
கிராமசபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும். ஊராட்சியினுடைய எல்லாப் பகுதிகளும் முழுமையான வளர்ச்சியடைய, அங்கே கூடியிருக்கக்கூடிய அலுவலர்களிடத்தில், அவர்கள் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கிராமசபையில் நடைபெற்ற விவரங்களைக் குறிக்க, பதிவேடு பராமரித்து, எல்லோருடைய கருத்துகளையும் பதிவுசெய்ய வேண்டும்.
நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்தல், சுகாதாரம் பேணுதல், முறையான திட, திரவக் கழிவு மேலாண்மை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நிலைநிறுத்துகிற வகையில், எல்லா ஊராட்சிமன்றத் தலைவர்களும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com