இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் “வெல்லும் சனநாயகம்” எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,உள்ளிட்ட INDIA கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். INDIA கூட்டணி அறிவித்தப் பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவது இதுவே முதன்முறை.

அகில இந்திய தலைவர்கள் வருவதையொட்டி, விழா ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துக்கொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க ஸ்டாலின், “திருச்சியில் கடல்போல் திரண்டிருக்கும் திருமாவின் சிறுத்தைகளே… இப்படி தோற்கின், எப்படை வெல்லும் என்பதற்கு இலக்கணமே, தீரர்கள் கோட்டமாம் அருமை சகோதரர் திருமாவின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்கக் கூடியிருக்கிறீர்கள்.
திருமாவளவனை சட்டக்கல்லூரி மாணவராக, மாணவர் தி.மு.க-வில் பணியாற்றிய காலத்திலேயே தெரியும். அப்போதே கல்லூரி மேடைகளிலும், கழக மேடைகளிலும் கொள்கை பேச்சு கர்ஜனையாக இருக்கும். ஜனநாயகத்தைக் காக்க இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அன்று கழகத்தில் இருந்து முழங்கினார், இன்று கழக கூட்டணிக்குள் இருந்து முழங்குகிறார். திருமா அவர்கள் எப்போதும் எங்களுக்குள் உள்ளே இருப்பவர், தலைவரோடு மட்டுமல்ல, எனக்கும் தோளோடு தோளாக இருப்பவர். நாங்கள் எப்போதும் தமிழினத்தின் வலிமைக்கு உரம் சேர்க்கும் வகையில் இருப்போம். எங்களுக்கிடையேயான இந்த உறவு, தேர்தல் உறவல்ல, அரசியல் உறவல்ல… கொள்கை உறவு. தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராலாவது பிரிக்க முடியுமா… அதுபோல தான் தி.மு.க-வும், வி.சி.க-வும். தந்தை பெரியாரின் மண்ணில் சென்னையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என பெயர் வைத்ததும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியதும் தலைவர் கலைஞர்தான். புரட்சியாளர் அம்பேத்கரை போற்றுகிற பட்டியலின மக்களின் நலனை பாதுகாக்கிற அரசுதான் நமது திராவிட மாடல் அரசு. அண்ணலின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்தோம்.

திருமாவளவன் கோரிக்கையை உடனடியாக ஏற்று, அம்பேத்கர் சிலையை அமைத்து நானே திறந்து வைத்தேன். அண்ணலின் படைப்புகளை செம்பதிப்புகளாக விரைவில் வெளியிடவிருக்கிறோம். ஆதி திராவிடர் பழங்குடியினர் ஆணையத்தைப் புதுப்பித்து உயிரூட்டினோம். நடத்தப்படாமல் இருந்த விழிப்புணர்வுக் கூட்டங்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தினோம். சமூகநீதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுவதுமாக அமைக்க வேண்டும் என்பதற்காக திருமாவளவன் இந்த மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். வெல்லும் சனநாயகம் என்று சொன்னால் மட்டும் போதாது, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இதற்கான கட்டளையைப் பிறப்பிக்கத்தான் இந்த மாநாட்டைக் கூட்டி, சர்வாதிகார பா.ஜ.க ஆட்சியை தூக்கியெறிந்து, ஜனநாயக அரசை நிறுவ வேண்டும் என்று சபதமேற்று மிக முக்கியமான 33 தீர்மானங்களை திருமாவளவன் இந்த மாநாட்டில் நிறைவேற்றியிருக்கிறார். இந்த சபதமும் வருகிற தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி. இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டும் என்ற கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
ஒன்றியத்தில் கூட்டாட்சி அரசையும் மாநிலத்தில் சுயாட்சி அரசையும் நிறுவ வேண்டும். அதனால்தான் குடியரசு தினத்தில் இந்த மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். கூட்டாட்சி அரசை ஒன்றிய அரசு என்று நாம் சொல்கிறோம். அதை அம்பேத்கர்தான் `யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் – ஒன்றிய அரசு’ என்றார். அதைதான் நாம் சொல்கிறோம். பா.ஜ.க ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஜீரோ. எனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க-வைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இங்கு மட்டும் பா.ஜ.க-வை வீழ்த்தினால் போதாது. அகில இந்திய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம்தான் `இந்தியா’ கூட்டணி. பா.ஜ.க என்பதால், தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரானது இந்தக் கூட்டணி என்று சொல்லிவிடமுடியாது. இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, பன்முகத்தன்மையை, மதச்சார்பின்மையை, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டுமென்றால், பா.ஜ.க மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக் கூடாது. இதுதான் நம்முடைய இலக்கு. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி, ஜனநாயக அமைப்பு, நாடாளுமன்ற நடைமுறை இருக்காது… இவ்வளவு ஏன், மாநிலங்களே இருக்காது.

இதை அனைவரும் உணரவேண்டும். மாநிலங்களை கார்பரேஷன்களாக மாற்றிவிடுவார்கள். அதற்கு உதாரணமாக ஜம்மு காஷ்மீரைச் சொல்லலாம். கேள்விகள் இல்லாத நாடாளுமன்றம், 140 எம்.பி-கள் சஸ்பெண்ட், இது அவமானமில்லையா… நான்கில் ஒருபங்கு உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததுதான் உங்கள் ஜனநாயகமா… இந்தியாவை சர்வாதிகார ஆட்சி நாடாக மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள். ஒன்றியத்தில் யார் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை மனதில் வைத்து, நாம் எல்லோரும் செயல்பட வேண்டும்.

பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகள் எக்காரணம் கொண்டும் சிதறக் கூடாது. `இந்தியா கூட்டணி அமைத்தார்கள், ஆட்சி அமைத்தார்கள்’ என்றுதான் வரலாறு சொல்ல வேண்டும். பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டிருக்கும் பயத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர வேண்டும். இந்த வாய்ப்பை நாம் இறுகப்பற்றி, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால், நிச்சயம் பா.ஜ.க தோற்கடிக்கப்படும். ஜனயாகம் வெல்லும், அதை காலம் சொல்லும், திருமாவளவனும் வெல்வார்… அதையும் காலம் சொல்லும்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com