பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்டதை பயிற்றுவிக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து `மைக்ரோசாஃப்ட் TEALS” திட்டத்தைப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கிறது. இதனை வரவேற்ற தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “வரும் கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக உத்தரப்பிரதேச மாநில அரசு, கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடி கொண்டுவந்த, புதிய கல்விக் கொள்கையை படிப்படியாகத் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழ்நாட்டில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்குத் தமிழ்நாடு அரசு, `அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக வாய்ப்பு இல்லை’ என எதிர்வினையாற்றியிருக்கிறது.
இதுகுறித்த அறிக்கையில், “ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக மைக்ரோசாஃப்ட் TEALS திட்டம் என்னும் திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கிறது. இது குறித்து அண்ணாமலை கூறுகையில், இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக் கூடாது.
நன்றி
Publisher: www.vikatan.com