தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிலையில், திடீரென அவர் கரூருக்கு மாற்றப்பட்டதற்கு அரசியல் அழுத்தம் காரணம் என பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன. அதைத் தொடர்ந்து, அவரை தஞ்சாவூரிலேயே பணியைத் தொடரவைக்க வேண்டும் எனவும் பலத்த கோரிக்கை எழுந்திருக்கிறது.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக இரண்டு வருடங்களுக்கு முன்பு சரவணக்குமார் பொறுப்பெற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது மாநகராட்சி நிர்வாகம். இந்தச் சூழலில் கடும் எதிர்ப்புகளை மீறி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட கடைகளை ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம் விட்டார்.
கூடுதலாக வாடகை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையிலும், வணிகர்கள் ஏலத்தின் மூலம் கடைகளை வாடகைக்கு எடுத்தனர். அதேபோல் சரபோஜி, காமராஜர் மார்க்கெட் கடைகளின் வாடகை அதிகம் எனப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓப்பன் டெண்டர் உள்ளிட்ட பலவற்றால் மாநகராட்சியின் வருமானத்தை சரவணக்குமார் உயர்த்தினார். ஊழியர்களுக்குத் தடையில்லாமல் முறையாக சம்பளம் போடும் நிலைக்கு நிதிநிலையை மாற்றினார்.
தி.மு.க பிரமுகர் ஒருவர் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடம் உட்பட ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இடங்களை மீட்டெடுத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 80 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன. தற்போது தஞ்சை நகரம் முழுவதிலும் அகலமான சாலைகள் அமைக்கப்பட்டு, விஸ்தாரமாக மாற்றியிருக்கிறார்.
இந்தச் சூழலில் சரவணக்குமார் கரூர் மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தஞ்சாவூர் ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், சரவணக்குமார் ஆணையராக தஞ்சாவூரிலேயே தொடர வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது குறித்து சிலரிடம் பேசினோம், “சரவணக்குமார் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானதும், உள்ளூரைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் அவரது செயலை பாராட்டி `சோழதேசத்தை சொர்க்க பூமியாக மாற்றியவர்’, `இப்படி ஒரு துணிச்சலான அதிகாரியை தஞ்சை மக்கள் கண்டதில்லை’ என்பது போன்ற வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர், மாற்றம் செய்யப்பட்டதை வரவேற்றம் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சரவணக்குமார் மாற்றப்பட்டதில் அரசியல் அழுத்தம் இருந்ததாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தி.மு.க மேயர் சண்.இராமநாதனும், சரவணகுமாரும் நகமும் சதையுமாக இருந்தாலும், சீனியரான எம்.பி பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் சரவணகுமாருக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தனர். குறிப்பாக ஆரம்பத்திலிருந்து தற்போதுவரை நீலமேகம், சரவணகுமாருடன் மோதல்போக்கைத் தொடர்ந்தார்.
சரவணக்குமார் குறித்த சில சர்ச்சைகள் வெளியானதை தகுந்த ஆதாரங்களுடன் தலைமைக்கு நீலமேகம் தரப்பு அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. மேயர் இராமநாதன் தஞ்சாவூரில் பணியை தொடர வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி வரை பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், `மத்திய மாவட்டச் செயலாளரான எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரனிடம் இதை வலியுறுத்த ஆர்டர் போட்ட பிறகு என்னால் எதுவும் செய்ய முடியாது’ என கைவிரித்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பான விவகாரமும் தலைமையின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. ஒரு முறை ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை முதல்வர் உட்பட அனைவரும் புறக்கணிக்க, சரவணக்குமார் மட்டும் கலந்துகொண்டதும் சர்ச்சையானது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் சரவணகுமாருக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததைத் தொடர்ந்து, தற்போது அவர் மாற்றப்பட்டிருக்கிறார். சரவணக்குமார் ஆணையராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் ஆகின்றன. குறிப்பாக மூன்று வருடங்கள் வரை அவர் பணியில் இருக்கலாம். ஆனால் திடீரென அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 80 சதவிகிதம் அளவுக்கு முடிந்த நிலையில், மேலும் பணிகள் தடையின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால், அவர் நிச்சயம் பணியில் தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு செல்கின்ற வகையில் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டார், அதனால் சிறு வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.
வாடகை அதிகமாக நிர்ணயம் செய்ததால் மாநகராட்சி கடைகளில் வாடகைக்கு இருக்கும் பலர் வாடகை கட்ட முடியாத சூழலில் தவித்தனர். அதனை அவர் கண்டுகொள்ளவில்லை என ஆணையருக்கு எதிரானவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தாலும், நிச்சயம் தஞ்சாவூரில் சரவணகுமாருக்கு முன்னும், பின்னும் என வளர்ச்சிப்பணிகள் குறித்து பட்டியலிடலாம். அரசியல் அழுத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆணையர் சரவணகுமாரை தஞ்சாவூரில் பணி நீட்டிப்பு செய்தால், மிச்சமிருக்கும் பணிகளைத் திட்டமிட்டபடி முடிப்பார்” என்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com