தஞ்சாவூர் மாநகராட்சியில் அதிகாரிகள் ஆய்வு; முன்னாள்

தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான கடைகள் வாடகைக்கு விடுவதற்கான டெண்டரில் விதிமீறலும், முறைகேடும் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களாக தஞ்சாவூர் மாநகராட்சியில் நகராட்சித்துறை நிர்வாக தணிக்கைக் குழுவினர் ஆய்வு நடத்தி வருவது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஆய்வு

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், கீழவாசல் சரபோஜி மார்க்கெட், காமராஜர் காய்கறி மார்கெட் உள்ளிட்ட இடங்களில் இருந்த பழைய கடைகள் இடிக்கப்பட்டு, புதிய கடைகள் கட்டப்பட்டன.

இந்தக் கடைகளை முந்தைய மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஓப்பன் டெண்டர் முறையில் வாடகைக்கு விட்டார். இதில், `அரசு விதிகள் முறையாகக் கடைபிடிக்கவில்லை, கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் செலுத்திய டெபாசிட் பணத்தை விதியை மீறி எடுத்து, வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தியிருக்கின்றனர். இதில் முறைகேடு நடந்திருக்கிறது’ எனப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநர் லெட்சுமி தலைமையிலான தணிக்கைக் குழுவினர், கடந்த சில தினங்களாக ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆணையர் சரவணக்குமார்

இது குறித்து சிலரிடம் பேசினோம். “இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆணையராக சரவணக்குமார் பொறுப்பேற்றபோது, தஞ்சாவூர் மாநகராட்சி, ஊழியர்களுக்குச் சம்பளம் போட முடியாத நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட கடைகளை ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம்விட்டார். இதன் மூலம் கடைகளுக்கான வாடகை பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தஞ்சாவூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம் இதனை நேரடியாக எதிர்த்தார். ஆனால், சரவணக்குமார் தான் நினைத்தபடி டெண்டரை நடத்தி முடித்தார். நகரப்பகுதியில் ஆக்கிரமிப்பிலிருந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை மீட்டார். அதிரடியாக அவரது செயல்கள் தொடர்ந்தன.

ஆணையர் சரவணக்குமார் நடவடிக்கையில் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர் எனவும், பெரு முதலாளிகளுக்கான ஆணையராகச் செயல்படுகிறார் எனவும் அவர்மீது குற்றச்சாட்டு கிளம்பியது. இந்த நிலையில், ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்த சம்பளம் போடப்பட்டது. ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் இருந்த பணப்பலன்கள் கொடுக்கப்பட்டன.

தமிழகத்திலேயே கடன் இல்லாத மாநகராட்சி தஞ்சாவூர் என்ற அறிவிப்பும் வெளியானது. பல்வேறு விருதுகளைப் பெற்று சிறப்பான மாநகராட்சியாக திகழ்ந்தது. இதற்கு சரவணக்குமார்-தான் காரணம் எனப் பலரும் பேசி வந்தனர். இந்த நிலையில், ஆணையர் சரவணக்குமார் திடீரென கரூர் மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் ஆணையராக இருந்த மகேஸ்வரி, கடந்த மாதம் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆணையர் சரவணக்குமார் கடைகள் டெண்டர்விட்டதில் முறைகேடு செய்திருப்பதாக புகார் வந்ததைத் தொடர்ந்து மகேஸ்வரி, உயரதிகாரிகளுக்கு இதனைக் கொண்டு சென்ற நிலையில், தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி

இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 1,100 கடைகள் இருக்கின்றன. இதில் 1,000 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன. அதில், 751 கடைகள் மட்டுமே ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 249 கடைகளில் யார் வாடகைக்கு இருக்கிறார்கள், வாடகை எவ்வளவு என்ற எந்த ஆவணமும் இல்லை. அதேபோல் டெண்டர் விடுவதில் ஆணையர் சரவணக்குமார் அரசு விதியை முறையாகப் பின்பற்றாமல் கடைகளை வாடகைக்குக் கொடுத்திருக்கிறார். அதற்காகப் பெறப்பட்ட டெபாசிட் பணத்தை, ஒன்பது வருடங்கள் வரை வேறு எந்த செலவுக்கும் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. ஆனால், டெபாசிட் பணத்தை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். இதில் முறைகேடு நடந்திருக்கிறது.

கூடுதல் தொகைக்கு வாடகைக்கு விட்டதால், அதை செலுத்த முடியாத வணிகர்கள் பலர் கடையை காலி செய்துவிட்டனர். டெபாசிட் பணத்தை எடுத்து அதனை அட்ஜஸ்ட் செய்திருக்கின்றனர். அதன் பிறகு விதியைப் பின்பற்றாமல், குறைந்த வாடகைக்குக் கடைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. காந்திஜி வணிக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. அவற்றை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடைகள் கட்டப்பட்டன. அதில் விதியை மீறி மூன்று முக்கிய நிறுவனங்களுக்கு மொத்தமாக கடையைக் கொடுத்திருக்கிறார். இதிலும் முறைகேடு நடந்திருக்கிறது.

ஆணையர் சரவணக்குமார்

இதெல்லாம், ஆணையர் மகேஸ்வரியின் கவனத்துக்குப் புகாராக வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், உயரதிகாரிகளிடம் இதை அவர் எடுத்து சென்ற பிறகு, ஆய்வுகள் நடத்த உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநர் லெட்சுமி ஒவ்வொரு கோப்பாக ஆய்வு செய்து வருகிறார்” என்றனர்.

முன்னாள் ஆணையர் சரவணக்குமார் தரப்பில் பேசினோம். “தஞ்சாவூரின் மண்ணின் மைந்தனாகவே மாறி கடுகளவும் தவறு நடக்காமல், தஞ்சாவூரின் வளர்சிக்காகப் பணியாற்றியிருக்கிறேன். நான் பொறுப்பேற்றபோது இருந்த தஞ்சாவூருக்கும் இப்போது இருப்பதற்கும், நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. நான் மாற்றலாகிச் சென்றபோது பொதுமக்கள் பலரும் கண்ணீர் வடித்ததே, என் உழைப்புக்குக் கிடைத்த பரிசு. தவறு நடந்திருப்பதைக் கண்டுபிடித்து உறுதி செய்தால், அதற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு இருக்கிறது” என சரவணக்குமார் கூறியதாக நம்மிடம் தெரிவித்தனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *