தெலங்கானாவில் பல்கலைக்கழக வளாகத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை விரட்டிச் சென்ற இரு பெண் போலீஸார், மாணவியின் தலைமுடியை இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறே பிடித்து இழுத்துக் கொண்டு செல்லும் வீடியோ, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் `புரொஃபசர் ஜெயசங்கர் தெலங்கானா ஸ்டேட் அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி” (PJTSAU) அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக உயர் நீதிமன்றக் கட்டடங்களை அமைக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. இதற்காக வளாகத்தில் உள்ள ஏராளமான பழைமையான மரங்கள் வெட்டப்படுவதைக் கண்டித்தும், வேறு பகுதியில் நீதிமன்றக் கட்டடங்களை அமைக்க வலியுறுத்தியும் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜன., 24ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து போகச் சொல்லி அப்பகுதி போலீஸார் அறிவிப்பு வழங்கினார். ஆனால், மாணவர்கள் கலைந்து போகாததால், போலீஸார் அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கத் தொடங்கினர். இதனால், மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
இதில், போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த ஒரு மாணவியை, இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்ற இரு பெண் காவலர்கள்… அந்த மாணவியின் கூந்தலைப் பிடித்து இழுத்தனர். இதில் அந்த மாணவி தடுமாறி விழுந்ததும், அப்படியே தரதரவென சில அடி தூரத்துக்கு அவரை இழுத்துச் சென்றனர். இதை அங்கிருந்த மாணவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ பதிவுசெய்து, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com