மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, 2026 – 2027-ல் நம் நாட்டின் பொருளாதாரத்தை, 5 ட்ரில்லியன் டாலர் (ரூ.416 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில், நம் நாடு மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், நம் நாட்டின் ஜி.டி.பி முதன்முறையாக, 4 ட்ரில்லியன் டாலர் (ரூ.333 லட்சம் கோடி) அளவுக்கு உயர்ந்திருப்பதாக மத்திய அமைச்சர்கள் கஜேந்திரசிங் ஷெகாவத், கிஷன் ரெட்டி, மராட்டிய மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர் புரந்தரேஸ்வரி, பிரபல தொழில் அதிபர் அதானி ஆகியோர் இந்திய அரசுக்கு வாழ்த்து தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க தலைவர்களும் பொய்யைப் பரப்பி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஞாயிறு மதியம் 2:45 மணி முதல் மாலை 6:45 மணி வரை, இந்திய மக்கள் எல்லோரும் கிரிக்கெட் போட்டியை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ராஜஸ்தான், தெலங்கானாவைச் சேர்ந்த மூத்த மத்திய அமைச்சர்கள், மகாராஷ்டிராவின் துணை முதல்வர்,
பிரதமரின் விருப்பமான தொழிலதிபர் உள்ளிட்ட மோடி அரசுக்கு பல்வேறு வகையில் தம்பட்டம் அடிப்பவர்கள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 ட்ரில்லியனைத் தாண்டியிருக்கிறது எனப் பொய்ச் செய்தியைப் பரப்பி வருகிறார்கள். இது முழுக்க முழுக்க போலியான செய்தி. தங்கள் ஆதரவாளர்களுக்குப் பரவசத்தை உண்டாக்குவதற்காகவும், தலைப்பு செய்தியில் இடம்பிடிக்கவுமே இந்தப் பரிதாபகரமான முயற்சிகள் நடக்கின்றன” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய பா.ஜ.க அரசின் அமைச்சர்கள் தங்கள் எக்ஸ் பக்கத்தில் பதிந்த செய்தி தொடர்பாக, எந்தப் புள்ளி விவரத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com