அரசு போக்குவரத்துக் கழகங்களின் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற 92,000 ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள 96 மாத டி.ஏ.படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐ.என்.டி.யு.சி, டி.டி.எஸ்.எஃப், பி.எம்.எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தம் குறித்த நோட்டீஸை அறிவித்திருந்தன.

அதைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அரசின் நிதிநிலைக் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன் பிறகே தொழிலாளர் அமைப்புடன் சமரச பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து, சி.ஐ.டி.யு, தொழிற்சங்கத்தின் சவுந்தரராஜன் அளித்தப் பேட்டியில்,“தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து இப்போது முடிவு சொல்ல முடியாது. பொங்கலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பதில் நியாமற்ற, திருப்தியற்ற பதில். இந்த அரசு போக்குவரத்து ஊழியர்களை இரண்டாம் தர குடிமக்களாகதான் நடத்துகிறது. பஞ்சப்படி ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி. அது எங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய 8 ஆண்டு கடன்.

அமைச்சரிடம் எங்களின் மற்ற ஐந்து கோரிக்கைகளைக் கூட பொங்கலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு தரவேண்டிய கடனைமட்டுமாவது திரும்பக்கொடுங்கள் எனக் கேட்டோம். அதையும் ஏற்கமறுக்கிறது அரசு. இதை ஏற்கவில்லை என்றால், வேலை நிறுத்தத்தை ரத்து செய்யக் கூறுவதற்கு அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது… இரண்டு தரப்பும் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஆனால், அதை முன்னெடுக்க வேண்டியது அரசு.
வெறும் ரூ.70 கோடியில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் எங்களின் இந்தக் கோரிக்கையை சுருக்கிவிட்டும் அரசு இறங்க மறுக்கிறது என்றால், இதைக் கேள்வி கேட்க வேண்டியது மக்கள்தான். எனவே, நாங்கள் எங்களின் வேலை நிறுத்தத்தை திரும்பப்பெற முடியாது என்பதைக் கூறிக்கொள்கிறோம். இன்று இரவுக்குள் எங்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு எங்களை அழைத்துப் பேசினால் தீர்வு காணமுடியும்.

ஒட்டுமொத்த தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, தொழிற்சங்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும், பேருந்துகள் இயக்கம் எப்போதும் போல இயங்கும் என அமைச்சர் சிவசங்கள் அறிவித்திருப்பதும் குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com