மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொள்ளும் துயரம் தமிழ்நாட்டில் தொடர்கதையாகிவருகிறது. இதைவிட அதிகமாக ராஜஸ்தானில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமை நிகழ்ந்துவருகிறது
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரிலிருந்து 240 கி.மீ தொலைவில் சம்பல் நதிக்கரையில் அமைந்திருக்கிறது கோட்டா என்ற நகரம். ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தானின் மூன்றாவது பெரிய நகராக கோட்டா விளங்குகிறது. இந்த நகரில் NEET, JEE உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் இயங்குகின்றன. அங்கு சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பல்வேறு தேர்வுகளுக்குத் தயாராகிவருகின்றனர்
அங்கு, நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த ஒரு மாணவர், ஆகஸ்ட் 27-ம் தேதியன்று கோட்டாவிலுள்ள ஒரு நீட் பயிற்சி மையத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பயிற்சி மையத்தில் பிற்பகல் 3.15 மணிக்கு ஒரு தேர்வை எழுதிய பிறகு மாடியில் இருந்து அவர் கீழே குதித்திருக்கிறார்.
உடனடியாக அந்த மாணவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலம் லட்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்.
அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில், கோட்டாவில் நீட் பயிற்சி பெற்றுவந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் வசித்துவந்த வாடகை வீட்டில், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரும் பயிற்சி மையத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி மதியம் தேர்வெழுதிவிட்டு திரும்பிய பிறகு, மாலை 7 மணியளவில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் அடுத்தடுத்து வெளியான நிலையில்தான், இந்த ஆண்டில் மட்டுமே கோட்டாவில் 24 மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் பரவியிருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த இரண்டு மாதங்களுக்கு எவ்வித தேர்வும் நடத்தக் கூடாது என்று கோட்டா நகரிலுள்ள பயிற்சி மையங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், ‘வாரத்தில் ஒரு நாளாவது வகுப்பு, தேர்வு இல்லாமல் மாணவர்களுக்கு முழு விடுப்பு அளிக்கப்பட வேண்டும். பயிற்சி மையங்களின் தங்கும் விடுதிகளிலுள்ள மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொருத்தப்பட வேண்டும்’ என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பற்றி அங்குள்ள பயிற்சி மையங்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. காரணம், நீட் தேர்விலும் ஜே.இ.இ தேர்விலும் எப்படியாவது தேர்ச்சிபெற்றுவிட வேண்டும் பயிற்சி மையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேருகிறார்கள். தினமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் வகுப்புகள், டெஸ்ட் என அந்த மாணவர்கள் பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். இது, கோட்டாவில் மிகப்பெரிய பிசினஸாக இருக்கிறது. ஓர் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி அளவுக்கு பிசினஸ் நடக்கிறது என்று ராஜஸ்தான் அரசு வட்டாரத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிருந்து 10-ம் வகுப்பு முடித்தவுடன் ஏராளமான மாணவர்கள் கோட்டாவுக்கு செல்வார்கள். அங்குள்ள பயிற்சி மையங்களில் சேர்ந்து அவர்கள் படிப்பார்கள். பள்ளிகளிலும் அவர்களின் பெயர் இருக்கும். பயிற்சி மையங்களில், அந்த மாணவர்களை பிளஸ் 2 தேர்வுக்கு தயார்ப்படுத்துவர்கள். அதே நேரத்தில், நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கும் தயார்படுத்துவார்கள். அதனால், அவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். குடும்பத்திலிருந்து பிரிந்திருக்கும் சூழலும் அவர்களின் மனஉளைச்சலை அதிகரிக்கும்.
காவல்துறையின் புள்ளிவிவரப்படி, கோட்டாவில் 2022-ம் ஆண்டு 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 2019-ம் ஆண்டு18 மாணவர்களும், 2018-ம் ஆண்டு 20 மாணவர்களும், 2017-ம் ஆண்டு ஏழு மாணவர்களும், 2016-ம் ஆண்டு 17 மாணவர்களும், 2015-ம் ஆண்டு 18 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 2020-ம் ஆண்டும், 2021-ம் ஆண்டு கோட்டாவில் மாணவர் தற்கொலை எதுவும் இல்லை என்கிறார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக பயிற்சி மையங்கள் மூடப்பட்டிருந்ததே அதற்கு காரணம்.
மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு குறித்து கவலை தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இத்தகைய தற்கொலைகளைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com