அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா, கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆனால், ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கோயில்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம், பொது இடங்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய மாநில அரசு தடை விதித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பா.ஜ.க-வினரும் குற்றம்சாட்டினர்.

அதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” எனப் பதிலளித்திருந்தார்.
ஆனாலும், இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அன்றைய தினமே விசாரித்த உச்ச நீதிமன்றம், “நேரடி ஒளிபரப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தால், அதனை நிராகரிக்கக் கூடாது” என உத்தரவிட்டது.
இந்த நிலையில், அந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் பதில், மனு அளித்தார். அதில், “பிராண பிரதிஷ்டை விழாவின் நேரடி ஒளிபரப்பு, கோயில் விழா, பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் என அனைத்தும் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் எவ்வித குறுக்கீடுகளும் இன்றி நடைபெற்றன. உள்ளரங்க விழாவாகவும், வெளிப்புற விழாவாகவும் மொத்தம் 252 நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடந்தன.
தமிழ்நாட்டில் அயோத்தி கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும், பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் ஆகியவற்றை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்மொழி தடை உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, தவறானது. தமிழ்நாடு அரசை இந்து விரோதியாகச் சித்திரிக்கும் இந்த முயற்சி தவறானது, கண்டிக்கத்தக்கது.

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா தமிழ்நாட்டின் பல கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூஜைகள், அர்ச்சனைகள் ஆகியவை மாநிலம் முழுவதும் உள்ள பல கோயில்களில் நடைபெற்றுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com