திருநெல்வேலி மாநகரத்துக்குட்பட்ட மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள். அப்போது, ஆறு பேர் கொண்ட ஒரு சாதிவெறிக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அந்த இரு இளைஞர்களையும் வழிமறித்துத் தாக்கியிருக்கிறது. அவர்களிடமிருந்து செல்போன்களையும் அந்த கும்பல் திருடிச் சென்றிருக்கிறது.

ஆற்றில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அந்த இரு இளைஞர்களை வழிமறித்து, அவர்களின் சாதியை அந்தக் கும்பல் கேட்டிருக்கிறது. தாங்கள் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்த இளைஞர்கள் சொன்னவுடன், அவர்கள்மீது சிறுநீர் கழித்து, ஆயுதங்களால் அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
சாதிவெறிக் கும்பலின் தாக்குதலுக்கு ஆளான அந்த இளைஞர்களை மீட்ட ஊர்மக்கள், அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து திருநெல்வேலி மாநகர் தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, பொன்னுமணி, நல்லமுத்து, ராமர், சிவா, லட்சுமணன் உள்ளிட்ட ஆறு பேரைக் கைதுசெய்தனர். அவர்கள்மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை வழக்கு, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்.

இதே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் 12-ம் வகுப்பு மாணவன் சின்னதுரையையும், 9-ம் வகுப்பு படிக்கும் அவருடைய சகோதரியையும் சாதிய வன்மத்தோடு சக பள்ளிக்கூட மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய அந்தச் சம்பவம், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
நாங்குநேரி சம்பவம் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், ‘நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம்கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல், சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது. குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும்’ என்றார்.

நாங்குநேரி சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, திருநெல்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார்.
நாங்குநேரி சம்பவத்தையொட்டி, தமிழ்நாடு அரசுக்குப் பல கோரிக்கைகளை திருமாவளவன் முன்வைத்தார். அதாவது, ‘தீவிரவாத அமைப்புகளைக் கண்காணிக்க காவல்துறையில் தனி பிரிவு இருப்பதைப்போல, சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் வன்முறையைத் தூண்டும் செயலில் ஈடுபடுவர்களைக் கண்டுபிடிக்கவும், அத்தகைய வன்முறைகளை முன்கூட்டியே கண்டுபிடித்துத் தடுக்கவும், தனியாக ஓர் உளவுப்பிரிவைத் தொடங்க வேண்டும்.

வள்ளியூர், நாங்குநேரி ஆகிய பகுதிகளில் நிறைய சாதிய வன்கொடுமைகள் நிகழ்கின்றன. எனவே, அவற்றை வன்கொடுமைப் பகுதிகள் என்று அரசு அறிவிக்க வேண்டும். நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் சாதியின் பெயரால் நடக்கும் வன்முறைகளை, அரசு கூடுதல் கவனம் செலுத்தி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை திருமாவளவன் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட சின்னதுரைக்கும் அவருடைய சகோதரிக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ததால், அவர்கள் விரைவில் உடல் நலம் தேறினர். சமீபத்தில், சின்னதுரையும் தன் தங்கை, அம்மாவுடன் சென்று அமைச்சர் உதயநிதியைச் சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் சிறந்த மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்தக் குடும்பத்துக்குத் தேவையான சில அடிப்படை வசதிகளை உறுதிசெய்வதுடன் தமிழ்நாடு அரசு தன் கடமையை முடித்துக்கொண்டதாகத் தெரிகிறது. ஆகையால்தான், மீண்டும் அந்த மாவட்டத்தில் ஒரு வன்கொடுமைச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

சாதி வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாவளவன் முன்வைத்த கோரிக்கைகள் எதையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் சமூகச் செயற்பாட்டாளர்களால் எழுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் சாதி வன்கொடுமை வழக்குகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. 2022 நவம்பர் முதல் 2023 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும், தமிழ்நாட்டில் 450 எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக ‘எவிடென்ஸ்’ அமைப்பின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்றுவரை குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை.
இத்தகைய சாதிய வன்கொடுமைகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டுமென்ற குரல், மீண்டும் ஒருமுறை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com