சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தி.மு.க இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், ராமர் கோயில் நிகழ்ச்சிகளைத் தமிழ்நாட்டு கோயில்களில் நேரலை செய்ய மாநில அரசு தடைவிதித்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்ட ட்வீட், பரபரப்பை ஏற்படுத்தியது. அவ்வாறு இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியபோதும், காஞ்சிபுரத்தில் தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் காமாட்சி கோயிலுக்குச் இன்று காலை சென்ற நிர்மலா சீதாராமன், கோயிலில் நேரலை செய்ய வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரைகளை போலீஸார் அகற்றியதாகக் கூறி, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து. இது தொடர்பான மனு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம், `ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீஸார் அனுமதி தேவையில்லை’ எனக் கூறிவிட்டது. பின்னர், தமிழ்நாட்டின் கோயில்களில் எந்தவொரு சச்சரவுமின்றி வழிபாடுகள் எல்லாம் நடைபெற்றது. அயோத்தி ராமர் கோயிலிலும் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், நேரலை செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பதாக நேற்று முதல் கிளம்பிய பேச்சுகளுக்கு, பா.ஜ.க-வை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியிருக்கிறார்.
இது குறித்த அறிக்கையில், “மதவெறி அரசியலால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க அரசு, தனது பத்தாண்டுக்கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல், முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதை மறைப்பதற்காக, ஆன்மிகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது. சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமன்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டுவருகிறது பா.ஜ.க.
ராமர் கோயில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து, அதனை உண்மைபோல ஆக்கும் பணியை பா.ஜ.க-வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க-வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி, திட்டமிடப்பட்ட வதந்தி. `பக்தி என்பது மகிழ்ச்சிக்கும், அமைதிக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல.
சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டுக்கு வழி வகுத்திடக் கூடாது’ என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க-வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க-வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.
காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார். கோதண்டராமர் திருக்கோயில் அர்ச்சகர்களே, எந்த வித பயத்துக்கோ, அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும். பா.ஜ.க தன் தோளில் சுமக்கும் அயோத்தி ராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால், அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?
தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க-வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள். அவர்களின் தலையில் குட்டு வைப்பதுபோல உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்” என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com