மணிப்பூர் பற்றியோ – சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும் – ஒன்றிய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை. ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், ஒன்றிய அமைச்சரவையே கூடி இருக்கிறது என்றால், இவர்கள்தான் பிற்படுத்தபட்ட – பட்டியலின –பழங்குடியின மக்களைக் காப்பற்றப் போகிறார்களா? பெண்ணினத்தை முன்னேற்றப் போகிறார்களா? அதனால்தான் நேற்று அண்ணல் அம்பேத்கரின் பேரன் திரு. பிராகாஷ் அம்பேத்கர் கூட, ”தீண்டாமையை ஆதரிக்கும் சனாதனத்தை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பிரதமர் பதில் என்ன? பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியானது பிரதமரை நிலைதடுமாற வைத்துவிட்டது. ஒரே நாடு – ஒரே தேர்தல் என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பா.ஜ.க. தானே தவிர, இந்தியா கூட்டணி அல்ல. பா.ஜ.க.வுக்கு இப்போது வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா என்ற அரசியல் கணக்கு. இதைப் புரிந்துகொள்ள பெரிய அரசியல் வித்தகம் எதுவும் தேவையில்லை. மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களே, “சமூக அமைப்பில் சக மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டோம். நாம் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் அது 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்புத் தீர்வுகள் இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com