அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசு மற்றும் ஆட்சிப் பதவிகளில் இருக்கும் தமிழர்கள் உட்பட பல்வேறு நபர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “மூன்றாவது முறையாக இந்த அயலக தமிழர் நாளில் உங்களைத் தாய் மண்ணுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. எனக்கு உடல் நலமில்லை, நான் உற்சாகமாக இல்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். அதைப் படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறை. அதைவிட எனக்கு வேறென்ன வேண்டும். நேற்று ஒரு வீடியோ பார்த்தேன், அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு சகோதரி, `கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் ரூ.1,000 வந்துவிட்டது. பொங்கல் பரிசாக ரூ.1,000, அரிசி, சர்க்கரை, கரும்பு வந்துவிட்டது. வெள்ள நிவாரணமாக ரூ.6,000 கிடைத்துவிட்டது. ஒரே மாதத்தில் முதல்வரே ரூ.8,000 கொடுத்துவிட்டார். பொங்கலுக்கு நான் யாரையும் எதிர்பார்க்கத் தேவையில்லை’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.
அவரின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாகமாக இருந்தது. எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்ததில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்தச் சென்ற தமிழர்கள் கொண்டாடும் மாநாடு என்று சொல்ல வேண்டும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற உழைப்புத் திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழ காரணம். 2010-ல் `வெளிநாடுவாழ் தமிழர் நலப் பிரிவு’ உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டதோடு, வாரியம் அமைக்கவும் சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து வந்த ஆட்சி மாற்றங்களால் அந்த முயற்சிகளில் தடை ஏற்பட்டது. இப்போது இருக்கும் திராவிட மாடல் அரசு, தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல அயலக தமிழர் நலனுக்குத் தனியாக ஒரு துறையை உருவாக்கி தனி அமைச்சரையும் நியமித்து, உங்களுடைய அவசர தேவைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை உள்ள தமிழர்களின் குழந்தைகளுக்கு, தமிழ் இணைய கல்வி கழகம் மூலம் தமிழ் கற்றுத் தரப்படுகிறது. வெளிநாடுகளில் கைதுசெய்யப்படும் சூழலுக்கு ஆளாகிற தமிழர்களுக்கு உரிய சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை இந்த துறை சிறப்பாகச் செய்து வருகிறது. பல்வேறு காரணங்களால் தாயகம் திரும்ப முடியாமல் கஷ்டப்படும் தமிழர்களைத் தாய் நாட்டுக்கு அழைத்து வரவும், அங்கே இறக்க நேரிடும் தமிழர்களின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரவும் தமிழ்நாடு அரசால் ஒரு கோடி ரூபாய் சுழல்நிதி ஏற்படுத்தப்பட்டு, தமிழர்களின் துயரங்களைத் துடைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உக்ரைன், சூடான், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் என்று பல்வேறு நாடுகளில் இருக்கின்ற நம்முடைய தமிழர்கள் அங்கு எதிர்பாராத விதமாகப் பிரச்னைகளை சந்திக்கின்றபோது, தமிழ்நாடு அரசு விரைவாகச் செயல்பட்டு பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த `எனது கிராமம்’ திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது. வெளிநாடு வாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய சேமிப்பைத் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் அயலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாகத் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அன்னையின் குழந்தைகள். அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்… எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள். கீழடி, பொருணை, ஆதிச்சநல்லூரைக் காட்டுங்கள். தமிழோடு இணைந்திருங்கள்” என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com