மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக சென்னை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. மொத்தமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்றும், அது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் நியாய விலைக்கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்றும், டிசம்பர் 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், புயல், வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகை ரூ.4 லட்சத்தை ரூ.5 லட்சமாகவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் ரூ.5,000-ஐ, ரூ.8,000-மாகவும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிலையில், எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த பகுதி மக்களுக்கு, எவ்வாறான பாதிப்புகள் அடிப்படையில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
எந்தெந்தப் பகுதிகள்?
சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், முழுமையாக தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய மூன்று வட்டங்கள், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய்க் கிராமங்கள் மட்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், முழுமையாக குன்றத்தூர் வட்டம். ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய்க் கிராமங்கள் மட்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள்.
யார் யாருக்கு நிவாரணத் தொகை:
(1) மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட / இரண்டு நாள்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள் / பாத்திரங்கள் / வீட்டு உபயோகப் பொருள்களை இழந்த குடும்பங்களுக்கு (மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்) நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன் வழங்கும் முறையைப் பின்பற்றி ரூ.6,000 வழங்கப்படும்.
(2) இந்த மழை வெள்ளத்தால் ஒன்றிய, மாநில அரசு / மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு / துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கிக் கணக்கு விவரத்துடன், தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கும் உரிய நிவாரணம் அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த அளவுகோலுக்குள் வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் நியாயவிலைக் கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு, நிவாரணத் தொகை வழங்கப்படும்.
நன்றி
Publisher: www.vikatan.com