இந்த நிலையில், இதில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை. கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மேற்படி அந்த நபர் தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, 25.10.2023 அன்று J-3 கிண்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அவர், IV-வது பெருநகர குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 09.11.2023 வரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வினோத் ஏற்கனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வினோத் மற்றும் அவரின் கூட்டாளிகள் சௌத் போக் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் 12.08.2015 அன்று பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர். அதேபோல் 13.07.2017 அன்று வினோத் மற்றும் அவரின் கூட்டாளிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரம்பிய பாட்டில்களை வீச முற்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு செய்யப்பட்டுள்ளது. வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆளுநருக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அச்சம்பவங்கள் தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு, 25.10.2023 அன்று T.செங்கோட்டையன் (ஆளுநரின் துணைச் செயலாளர்) புகார் அளித்துள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com