மிக்ஜம் புயலால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் ஏராளமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முதல் ரூ.6 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட்டது. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழக தென் மாவட்டங்களான தேனி, தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.
ALSO READ : தொடர் கனமழை எதிரொலி : அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், வைகை அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in