“சனாதனம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, விளையாட்டுப் பிள்ளைபோல் பேசியிருக்கிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய அவசியம் கிடையாது” என அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் தஞ்சாவூரில் தெரிவித்தார்.
டி.டி.வி.தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூருக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமைச்சர் உதயநிதி அடுத்தவர்களின் மத உணர்வுகளைப் பற்றிப் பேசியது தவறு, அதற்காக அவரது தலைக்கு விலை பேசியது அதைவிடக் காட்டுமிராண்டித்தனம்.
உதயநிதி தாத்தா கருணாநிதி, அவரின் தந்தையும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஆகியோர் இந்து மதம், கோயில், கடவுள் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகியவற்றைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள். ஆனால் அவர்களது வீட்டிலுள்ள பெண்கள் கோயிலில் சுற்றி வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், புரோகிதர்கள், அர்ச்சகர்களை வீட்டுக்கு அழைத்து, அவர்கள் காலில் விழுந்தும் மரியாதை செய்கிறார்கள்.
உள்ளொன்றும், வெளியொன்றும் வைத்துக் கொண்டு அவர்கள் வேஷம் போடுவதுபோல், அரசியலிலும் இதேபோல் வேஷம் போடுகிறார்கள். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சனாதானம் தர்மம் என்றால் என்னவென்று தெரியாமல், விளையாட்டுப் பிள்ளைபோல் பேசியதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடிய அவசியம் கிடையாது.
அமைச்சர் பதவியில் இருக்கும் உதயநிதி, முதல்வராக அவரின் தாத்தாவும் இருந்தபோதும், தற்போது முதல்வராகத் தந்தை இருக்கும்போதும், அரசியல் நாகரிகம்கூடத் தெரியாமல் பொது வாழ்க்கையில் தேவையில்லாமல், மதங்களை, மத உணர்வுகளை பேசுவது என்பது தவறு என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.
இதுவே இங்கு வேறு ஆட்சி இருந்தால், அவர்மீது வழக்கு தொடர்ந்திருப்பார்கள். தமிழகத்தில் அவர்களது ஆட்சி இருப்பதால், விட்டுவிட்டார்கள். சனாதானம் குறித்துப் பேசியதை, அமைச்சர் உதயநிதி திரும்பப் பெற வேண்டும். சனாதன தர்மம் என்பது இந்து மதங்களில் மட்டுமல்ல. எல்லா மதங்களிலும் உள்ளது. இதுகூட புரியாமல் வாக்கு வங்கிக்காக உதயநிதி பேசியிருக்கிறார். ஸ்டாலின் ஓணத்துக்கு மலையாளத்தில் பேசி வாழ்த்து சொல்கிறார். இதன் மூலம் பிராமணர்களை மறைமுகமாக வாழ்த்துகிறார். கடவுள் பக்தியைக்கூட துணிந்து காட்ட முடியாத தைரியமில்லாமல், இரட்டை வேடம் போடுகின்றனர்.
தி.மு.க-வுக்கு ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கவேண்டும் என்பதுதான் ஒரே எண்ணம். `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்டம் தொடர்பாக, பழனிசாமி பச்சோந்திபோல் தற்போது பேசி வருகிறார். அதேபோல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி பழனிசாமி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. முதலில் கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளையைப் பற்றி அரசு கண்டுபிடிக்க வேண்டும் என அவர் குரல் கொடுக்க வேண்டும்.
ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பது வரலாறாகும். ஒரு வேளை தேர்தல் நேரத்தில் ஒ.பி.எஸ், பழனிசாமி கூட்டணிக்குச் சென்றால், நட்புரீதியாக நீங்கள் அங்கு இருங்கள், நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம் எனக் கூறிவிடுவேன். எங்கள் கட்சி நிர்வாகிகள் தனித்துப் போட்டியிடுவதைத்தான் விரும்புகிறார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com