பிரிட்டன் பிரதமராகப் பதவி வகிப்பவர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராக இருந்தபோதுதான் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. அதில் பிரிட்டனில் மட்டும் 22,000 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பில், போரிஸ் ஜான்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவரது அமைச்சரவையிலிருந்த ரிஷி சுனக் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், அவர் பதவியேற்றதிலிருந்து பல்வேறு சலசலப்புகள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனாவில் இவ்வளவு மக்கள் பலியானதன் காரணம் குறித்தும், அதைத் தடுக்க அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது என்பதைப் பற்றியும் ஆராய, குழு ஒன்று அமைக்கப்பட்டது. மேலும், இந்தக் குழு 2026-ம் ஆண்டு வரை விசாரணை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், கொரோனா தொற்று பரவல் உச்சத்தின்போது, பிரிட்டன் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்த பேட்ரிக் வாலன்ஸின் டைரி ஒன்று விசாரணைக் குழுவிடம் கிடைத்தது. அதில், அக்டோபர் 25, 2020 அன்று அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் ஆகியோரின் சந்திப்பு பற்றி தனது டைரி குறிப்பில் பேட்ரிக் வாலன்ஸ் எழுதி வைத்திருக்கிறார்.
அந்த டைரியில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது, `ஊரடங்குக்கு உத்தரவிட வேண்டாம். அது நாட்டின் பொருளாதார நிலையை மேலும் வலுவிழக்கச் செய்யும். எனவே, மக்கள் இறந்தால் இறக்கட்டும்… அரசு அதை அனுமதிக்க வேண்டும்’ என ரிஷி சுனக் தெரிவித்ததாக, எழுதியிருக்கிறார். மேலும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த ஆலோசகராக இருந்த டொமினிக் கம்மிங்ஸ், `ரிஷி, மக்கள் இறக்கட்டும் பரவாயில்லை என்று நினைக்கிறார். முழுக்க முழுக்க தலைமைத்துவப் பண்பே இல்லாததுபோல் உணர்கிறேன்’ என, தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் ஊடகங்கள் கேள்வி கேட்க முயன்றபோது, அவரின் செய்தித் தொடர்பாளர், `ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதிலளிப்பதைவிட, பிரதமர் ரிஷி சுனக் விசாரணையில் ஆதாரங்களை வழங்கும்போது, தனது நிலைப்பாட்டைப் அறிவிப்பார்’ எனத் தெரிவித்திருக்கிறார். ரிஷி சுனக் நிதியமைச்சராக இருந்தபோது, கொரோனா காலத்தில், பப்கள் மற்றும் உணவகங்களில் உணவுக்கு மானியம் அளித்து, மக்கள் உணவகங்களில் சாப்பிட வேண்டும் என விளம்பரம் செய்தார்.
அப்போதே, ‘இது கொரோனா பரவலை அதிகப்படுத்தும் நடவடிக்கை’ என சுகாதார நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு மத்தியில்தான், `போரிஸ் ஜான்சனைவிடத் திறமையாக ஆட்சி நடத்துவேன்’ என்ற வாக்குறுதியுடன் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால், தற்போது அவரது தலைமையிலான அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com