மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துவந்தாலும், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கனமழை பெய்ததால் நிலைமை கைமீறிப் போனதாக தமிழக அரசு தெரிவித்தது. அதன்பின்னர், தமிழக அரசு மத்திய அரசிடம் ஐயாயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்டது. ஆனால், மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.450 மட்டுமே நிவாரண நிதியாக ஒதுக்கியது. அதோடு, வெள்ள மேலாண்மை பணிக்காக ரூ.561 கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
அதன்பின்னர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வழங்க உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே, தென் தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
அதைத்தொடர்ந்து, தென் தமிழக வெள்ள பாதிப்பு குறித்து டிசம்பர் 19-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்திக்க, அதற்கு முத்தைய நாளே டெல்லி புறப்பட்டார். அங்கு சென்று, இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு, இரவு 10:30 மணியளவில் மோடியைச் சந்தித்த ஸ்டாலின், ரூ.12,659 கோடி நிவாரண நிதியாக ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துவிட்டார். அதன்பின்னர், தமிழகம் திரும்பிய ஸ்டாலின் தென் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், தமிழக வெள்ள பாதிப்பு விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசுமீது அடுக்காக கேள்விகளை முன்வைத்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “வெள்ள பாதிப்பிலிருந்து 42,290 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். டிசம்பர் 21-ம் தேதி வரை 31 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தமாக ரூ.900 கோடி மத்திய அரசு வழங்கியிருக்கிறது. தென் தமிழகத்துக்கு டிசம்பர் 12-ம் தேதியே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. மேலும், ஒவ்வொரு மூன்று மணிநேரமும் முன்னறிவிப்பு செய்துகொண்டே இருந்தது. சராசரியான மழைபெய்யக்கூடிய நிலை என்றாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் எப்போது சென்றார்கள்…
தேசிய பேரிடர் மீட்பு படை போவதற்கு முன், தமிழக அரசு அதிகாரிகள் யாராவது இருந்தார்களா… சென்னையில், ரூ.4,000 கோடியில் 92 சதவிகித செலவழிச்சு பணிகள் முடித்திருக்கிறோம் என்று கூறிவிட்டு, வெள்ளம் வந்த பிறகு 42 சதவிகிததான் பணிகள் முடித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். பணத்தை என்ன செய்தீர்கள், ஏன் இந்த எண்ணிக்கை மாறியது. 92-க்கும், 42-க்கும் வித்தியாசம் தெரியாமல் கூறிவிட்டு, இன்னொரு அமைச்சர் மூலமாக வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாகக் கணித்துக் கூறவில்லை என்று சொல்கிறார்கள்.
2015 அம்பத்தூர் தொழிற்சாலைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பிறகும் என்ன கற்றுக்கொண்டீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் எதற்காக டெல்லியில் (இந்தியா கூட்டணி கூட்டம்) நாள் முழுக்க இருந்தார். அவரின் முன்னுரிமை எதற்கு… பேரிடர் இருக்கும்போது முதலமைச்சர் இந்தியா கூட்டணியுடன் இருக்கிறார்.
தேசிய பேரிடர் என்று அறிவிக்க ஒன்றும் இல்லை… மத்திய அரசு எதையும் தேசிய பேரிடர் என்று எப்போதும் அறிவித்ததில்லை. அந்த சிஸ்டமே இல்லை. அவர்கள் அப்பா வீட்டு பணமா என்ற கேட்கிறவர் (உதயநிதி), அவங்க அப்பா வீட்டின்மூலம் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கிறாரா… என்று கேட்க முடியுமா…
இந்த பேச்செல்லாம் அரசியலில் நல்லதல்ல… அவங்க தாத்தா எப்பேர்ப்பட்ட தமிழறிஞர்… அதனால, பதவிக்கு ஏற்றவாறு நாக்கில் வார்த்தைகள் அளந்து வரணும். நிவாரண நிதியையே மக்களுக்கு ஏன் ரொக்கமாக கொடுக்கிறார்கள்… நேரடியாக வங்கி கணக்குக்குக்கு அனுப்ப வேண்டியதுதானே… ” என்று பல்வேறு கேள்விகளை அடுகினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com