வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் எம்.சுதாகர். இவருக்குச் சொந்தமான லாட்ஜ், வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே இருக்கிறது. நேற்று இரவு கவுன்சிலர் சுதாகர் தனது லாட்ஜ் நுழைவு வாயிற் பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த 30-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் வி.எஸ்.முருகன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட நபர்கள், சுதாகரை வெளியே இழுத்து வந்து கண் மூடித்தனமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. சுதாகரை கும்பலாகச் சேர்ந்து தாக்கும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த தாக்குதலில் பல் உடைந்து, லேசான காயம் ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கவுன்சிலர் சுதாகர்.
மோதல் பின்னணிக் குறித்து, தி.மு.க-வினரிடம் விசாரித்தபோது, ‘‘தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30-வது வார்டு கவுன்சிலர் வி.எஸ்.முருகன், தி.மு.க-வில் அப்பகுதி வட்டச் செயலாளர், மாவட்ட பிரதிநிதியாகவும் கட்சிப் பதவிகளை வகிக்கிறார்.
அதோடு, வேலூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திகேயனின் தீவிர விசுவாசியாகவும் காட்டிக்கொள்கிறார். இதையெல்லாம் தாண்டி, அவர் வட்டி தொழிலை முழுநேரமாக செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வி.எஸ்.முருகனிடம் இருந்து சரவணன் என்பவர் கடன் பெற்றுள்ளார். இந்த சரவணன், 24-வது வார்டு கவுன்சிலர் சுதாகரின் நண்பர். அசல், வட்டித் தொகையை திருப்பித் தருவதில் சரவணன் காலதாமதம் செய்திருக்கிறார். கடனை அடைக்க, வி.எஸ்.முருகனிடம் பேசி கூடுதல் கால அவகாசம் பெற்றுத் தருமாறு, சுதாகரை அணுகியிருக்கிறார் சரவணன்.
சம்பவத்தன்று இரவு சுதாகர், இதுதொடர்பாக வி.எஸ்.முருகனுக்கு போன் செய்து பேசியதாக தெரிகிறது. அப்போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த வி.எஸ்.முருகன் 10-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்துக்கொண்டு வந்து, சுதாகரை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதில், அவருக்கு பல் உடைந்து, சட்டையும் கிழிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், புகாராக இந்த விவகாரம் இன்னமும் காவல் நிலையத்துக்கு வரவில்லை.’’ என்கின்றனர்.
இதுபற்றி, வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் கேட்டபோது, ‘‘கவுன்சிலர்கள் வி.எஸ்.முருகன், சுதாகர் இருவருமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கின்றனர். இருவரிடம் இருந்தும், ஸ்டேட்மென்ட் பெற்றுள்ளோம். இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. வட்டித் தொழிலில் ஏற்பட்ட பிரச்னையே, இந்த மோதலுக்குக் காரணம்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com