முன் எப்போதும் இதுபோன்ற மழையை நெல்லை மாவட்ட மக்கள் பார்த்தது கிடையாது. அந்த அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 16-ம் தேதி நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கியது.
இரவு முழுவதும் பெய்த மழையானது நேற்று (17-ம் தேதி) பகலிலும் நிற்காமல் கொட்டியதும் எங்கு பார்த்தாலும் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பாயத் தொடங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் மக்களிடம் அச்சம் தொற்றிக் கொண்டது. தொடர்ந்து பெய்த மழை இன்று (18-ம் தேதி) வரை தொடர்கிறது.
அதி தீவிரமாகப் பெய்யும் மழையால் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் வெள்ளநீர் ஆறாக ஓடியது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வார்டுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். பின்னர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மழைநீர் அகற்றப்பட்டதால் நோயாளிகளும் மருத்துவர்களும் நிம்மதியடைந்தனர்.
நெல்லை மாநகரின் தாழ்வான பகுதிகளில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக கைலாசபுரம், சிந்துபூந்துறை, சிஎன்.கிராமம், சேவியர் காலனி, என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரில் தத்தளித்தன். இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மானூர் தாலுக்காவுக்கு உள்பட்ட மூவரிருந்தாளி கிராமத்தின் குளம் நிரம்பி மறுகால் பாய்ந்த தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அதே போல அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் வயலில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கின. மேலஇந்தைக்குளம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது,.
நெல்லை மவட்டத்தின் அணைகள் அனைத்தும் நிரம்பும் தருவாயில் இருப்பதால் அணைகளுக்கு வரும் மழைநீர் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. அதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது. அதனால் நெல்லை மாநகரின் வடக்கு புறவழிச்சாலையை மூடியபடி தண்ணீர் செல்வதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் வரையிலும் தாமிரபரணி நீர் செல்வதால் ஆற்றைப் பார்க்கவே பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் ஆற்றங்கரையில் வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியில் அதிகப்பட்சமாக 61 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில் 44 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.
இது தவிர, மேற்குத் தொடர்ச்சி மலையின் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. அங்கு 100 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதால் அணைகள் வேகமாக நிரம்பின. ஓராண்டு காலத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெயதிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளோ, “எங்கள் காலத்தில் 1992-ம் ஆண்டு வெள்ளப் பெருக்கைச் சந்தித்தோம். ஆனால் அதை எல்லாம் விஞ்சும் அளவுக்கு தற்போது மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.
கடந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்திருக்கும் கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. செய்துங்கநல்லூர்-நாஞ்சாங்குளம் சாலை தாமிரபரணி வெள்ளத்தால் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது. திருச்செந்தூர் செல்லும் சாலையில் பல இடங்களில் தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை-தூத்துக்குடி சாலைலும் பல இடங்களில் தண்ணீர் குறுக்கிடுவதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி நகரில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு குடியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மழையால் ரயில் சேவையும் பெரும் பாதிப்படைந்திருக்கிறது. நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் நெல்லை, திருச்செந்தூர், செங்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் சில ரயில்கள் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்வதுடன் மின்சாரம் மற்றும் இணையதள் சேவை தடைப்பட்டிருப்பதால் மக்கள் தங்களின் இயல்பு வாழக்கையைத் தொலைத்துவிட்டு தவித்து வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com