லோக் சபா தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, உருவான நாள்முதல் இன்றுவரை கூட்டணிக்குள் சீட் பகிர்வு என்னவாக இருக்கும் என்பது பேசுபொருளாகவே இருக்கிறது. காரணம், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க, கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் என நான்கு மாநிலங்கள், டெல்லி யூனியன் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியில் இருக்கின்றன.
இதில், தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் மற்றும் டெல்லியில் ஆளுங்கட்சிக்கு எதிராக காங்கிரஸ் இருக்கிறது. இவற்றில் மட்டுமே மொத்தம் 82 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. ஆம் ஆத்மி மட்டும் இதுவரை சீட் பகிர்வில் வெளிப்படையாக வாய்திறக்காமல் இருந்தாலும், கம்யூனிஸ்ட்டும், திரிணாமுல் காங்கிரஸும் காங்கிரஸுடன் சீட் பகிர்வு விஷயத்தில் முரணாகவே பேசிவந்தன.
அதிலும், மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்குவதாகக் கடந்த வாரம் கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி, “தொகுதிப் பங்கீடு பற்றி நாங்கள் சொல்வதைக் கேட்க சிலர் விரும்பவில்லை” என காங்கிரஸைப் பெயர் குறிப்பிடாமல் நேற்று முன்தினம் விமர்சித்தார். இதன் காரணமாக, மம்தா பானர்ஜியை `சந்தர்ப்பவாதி’ என லோக் சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி சாடியிருந்தார். இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடப்போவதாக வெளிப்படையாக மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து இன்று பேசியிருக்கும் மம்தா பானர்ஜி, “காங்கிரஸுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்று எப்போதும் கூறி வருகிறேன். இதனால், என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், நாங்கள் மதச்சார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வை நாங்கள் தனியாகத் தோற்கடிப்போம். அதேசமயம், இந்தியா கூட்டணியில் நான் அங்கம் வகிக்கிறேன். ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நியாய யாத்திரை எங்கள் மாநிலம் வழியாகச் செல்கிறது. ஆனால், அது குறித்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியிருப்பது, இந்தியா கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com