ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்ததிலிருந்தே தமிழக அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை திமுக அரசு தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருக்கிறது. சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட கூட்டம் முடியும் முன்பாகவே ஆளுநர் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தான், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அரசு அனுப்பும் மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டிருக்கிறார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கவேண்டும். மேலும், ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்க, கால நிர்ணயம் செய்யவேண்டும்” என்று கோரப்பட்டது.
ஆளுநர் மனம் மாற வேண்டும்:
தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஒரு தனியார் செய்தித்தாளுக்குப் பேட்டி கொடுத்திருந்தார். அதில், “தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தபிறகு அவரை பலமுறை சந்தித்தும், பேசியும் இருக்கிறேன். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்றிருக்கிறோம். அந்த சமயத்தில் எல்லாம் அவர் என்னிடம் நன்றாகத்தான் பழகினார், பேசினார். நாங்கள் இருவரும் சந்திப்பது பிரச்னை கிடையாது.
ஆளுநர் ஆர்.என்.ரவி மனம் மாறி தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்படவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான சில சக்திகளின் கைப்பாவையாகச் செயல்படுவதை ஆளுநர் தவிர்க்கவேண்டும். அவர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” என்று ஆளுநர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
ஆளுநர் VS முதல்வர்:
ஆளுநர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதன் உள்ளர்த்தம் என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தபிறகு அரசுக்கும் அவருக்கும் இடையில் மோதல் போக்கு வெட்ட வெளிச்சமாகவே நடப்பதை நாம் பார்க்க முடிகிறது. திமுக அரசு திராவிட மாடல் என்று ஒன்றைப் பெரிதாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரோ, ‘திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது. காலாவதியான கொள்கையை உயிர்ப்புடன் வைக்கச் செய்யப்படும் முயற்சி’ என்று பொதுவெளியில் பேசுகிறார். இது ஒருமுறை அல்ல பல்வேறு தருணங்களில் அவர் திராவிடம் குறித்துப் பல சர்ச்சையான கருத்துக்களைச் சொல்கிறார். சனாதனம் குறித்துப் பேசுகிறார். இவை அனைத்துமே ஆளும் திமுக அரசுக்கு எதிரான கொள்கை தாக்குதல்.
இந்த அரசை ஆளுநர் விமர்சிக்கும் அதே நேரத்தில் அமைச்சரவை அனுப்பும் மசோதாக்களுக்கும் அவர் உரிய ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை திமுக அரசு தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. சமீபத்தில் ஆளுநரும், முதல்வரும் உட்கார்ந்து பேசி பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த சூழலில்தான் ஆளுநர் முதல்வரை அழைக்கவும் செய்திருந்தார். முதல்வர் மத்திய பாஜக அரசைத் தான் மறைமுகமாக சில சக்திகளின் கைப்பாவையாக இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் இருவரும் பேசுவது பிரச்சனை இல்லை. அவர் மத்திய அரசு சொல்வதைக் கேட்டு நடப்பதை விட்டுவிட்டு தமிழக மக்களுக்காக பணியாற்றவேண்டும் என்ற அர்த்தத்தில் பேசியிருக்கிறார்” என்றனர் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com