அதிமுக தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளும் சரி, தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளும் சரி தொடர்ந்து, பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவாகவே இருந்தது.
இந்த நிலையில் தான், பன்னீர்செல்வம் தற்போது ஒரு புதிய முடிவை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. பன்னீர்செல்வம் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தன்னை நம்பி இருக்கக்கூடிய தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை மனதில் வைத்தும், இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது.
அதாவது, அதிமுகவிலிருந்து முற்றிலுமாக தூக்கி எறியப்பட்ட நிலையில், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு, மாவட்டச் செயலாளர், கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர் போன்ற பதவிகளை ஓபிஎஸ் வழங்கி வருகின்றார். அதிமுகவில் மறுபடியும் இணைந்து செயல்படும் நோக்கத்தில், பன்னீர்செல்வத்துடன், நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து நின்றனர்.
ஆனால், மறுபுறமோ, பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் எடப்பாடி தரப்பு உறுதியாக இருக்கிறது. அதே நேரம், அவருடைய ஆதரவாளர்கள் எல்லோரையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியையும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னெடுத்து வருகிறது. இது பன்னீர்செல்வத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது என்று அரசியல் நோக்கங்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதன் காரணமாக, தன்னோடு ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் தன்னுடைய ஆதரவாளர்கள் மறுபடியும் அதிமுகவிற்கு சென்றுவிட்டால், தனக்கு பிரச்சினை தான் என்பதை உணர்ந்த பன்னீர்செல்வம், தன்னுடைய ஆதரவாளர்களை தக்க வைப்பதற்காக பல வியூகங்களை வகுத்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, தன்னுடைய ஆதரவாளர்களை தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைக்கும் விதமாக, பன்னீர்செல்வம் ஒரு புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதிமுகவின் கொடியில் ஒரு சில மாற்றங்களை செய்து, புதிய கட்சி கொடியை வடிவமைக்க அவர் திட்டமிட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அந்த புதிய கட்சிக்கு அம்மா திமுக அல்லது புரட்சித்தலைவர் அதிமுக என்று இரண்டு பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்ததாவது, எங்களுடைய அணியில் ஏற்கனவே 82 மாவட்ட செயலாளர் பணிபுரிந்து வருகிறார்கள். கிளைச் செயலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். அதிமுகவை போல ஒன்றிய அளவிலும், நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பாசறை மற்றும் பேரவைக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எந்த சூழ்நிலையிலும், தன்னுடைய ஆதரவாளர்களை கைவிட்டு விடக்கூடாது என்பதில், பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். இதன் காரணமாக தான், மிக விரைவில் புதிய கட்சி தொடங்குவதற்கு அவர் திட்டமிட்டு இருக்கிறார். அந்த புதிய கட்சிக்கு அம்மா திமுக என்று பெயரிடுவதற்கு அதிக அளவிலான வாய்ப்புகள் இருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, மறுபடியும் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும், அதற்கு டெல்லி பாஜக தலைவர்கள் நிச்சயமாக உதவி செய்தார்கள் என்று நினைத்திருந்தோம். நீதிமன்றத்தின் மூலமாக ஓரளவு எங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவை எதுவுமே நடக்கவில்லை. இதனால், தனிக்கட்சி ஒன்றே எங்களுடைய பலத்தை காட்ட ஒரே தீர்வாக இருக்கும். புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை மிக விரைவில் ஒரு பெரிய கூட்டத்தில் அறிவிக்க பன்னீர்செல்வம் முடிவு செய்து இருக்கிறார். தனி கட்சி ஆரம்பித்த பின்னர், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, மிகப்பெரிய மாநாடு நடத்துவதற்கு முடிவு செய்து இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து, களமிறங்க இருக்கிறோம். அப்போது, தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பன்னீர் செல்வத்திற்கு என்ன விதமான செல்வாக்கு இருக்கிறது என்பதை நிச்சயமாக நாங்கள் நிரூபிப்போம். இது அவருடைய எதிர்கால வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.
நன்றி
Publisher: 1newsnation.com