காவிரிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்பது ஒருபுறம் பெரும் சந்தேகமா இருக்கும் சூழலில், ஏற்கனவே திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடையை எட்டாமல் குறுவைப் பயிர்கள் கருகி வருகின்றன. அதற்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்து ஆய்வும் நடத்தப்பட்டது. ஆனால், நிவாரணத் தொகை வரவு குறித்த தகவல் எதுவும் இன்னும் வரவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
கடந்த ஜூன் 12-ம் தேதி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் நீர் போதிய அளவு கிடைத்ததால் பல விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய தீவிரம் காட்டினர். இதனால், இந்த ஆண்டு 5.20 ஏக்கரில் குறுவை பயிரிடப்பட்டது. ஆனால், அதன்பின் கர்நாடக அரசு சரியாக நீர் திறக்கவில்லை. இதனால், மேட்டூர் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. கடைமடை வரை நீர் பாயாததால் பல ஏக்கர் குறுவை பயிர்கள் கருகத் தொடங்கின.
எனவே, வேளாண்துறையின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழு நேரடியாக சென்று ஆய்வு செய்தது. விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசிடம் சமர்பித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிவாரணத்தொகை பற்றி விவாதிக்கப்பட்டது என்றும் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், ஆலோசனைக் கூட்டம் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும், அதற்கான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com