கொளுத்திப்போட்ட ஆர்.எஸ்.பாரதி… அதிமுக-வை அழிக்க


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று (ஆக 22-ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுக-வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது மறைமுகமாக திமுக-வுக்கனா மிரட்டலா?” என்று நிருபர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆர்.எஸ்.பாரதி

இதற்கு பதிலளித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, “இது பாஜக-வுக்காக இருக்கும். இல்லையென்றால் அண்ணாமலைக்கானதாக இருக்கும். எங்களுக்கு இருக்காது. நாங்கள் அவர்களை அழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையே. அதிமுக எங்கள் பங்காளி என்று நான் பல முறை சொல்லியிருக்கிறேனே. பகையாளி பாஜக-தான். திமுக., அதிமுக எல்லாம் ஒரே பிராண்டுதானே. அதிமுக-வை டெல்லியில் இருந்து அடித்துக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் தாங்குவார்கள். அதனால், போற போக்கை பார்த்தால் அவர்கள் எங்களுடன் இணைய வேண்டிய கட்டாயம் வரும்” என்றார்.

“நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஒரு பக்கம் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், மறுபக்கம் எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து I.N.D.I.A என்ற பெயரில் ஒரு கூட்டணி அமைத்தும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்தவகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக-வுக்கு அடுத்தப்படியாக அங்கம் வகிக்கும் பெரிய கட்சியான அதிமுக-வுக்கும், பாஜக-வுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பதை பட்டவர்த்தனமாக சொல்ல முற்பட்டிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. ஏற்கனவே எருதுகளை பிரித்து வேட்டையாடிய சிங்கத்தின் கதை போல், அதிமுக-வில் உட்கட்சி விவகாரத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது பாஜக என்கிற காட்டமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் கருத்தை மதுரை மாநாட்டில் எடப்பாடி பேசிய விஷயங்களோடும் பொருத்தி பார்க்க வேண்டும். ஏனென்றால்,` பா.ஜ.க-வுடன் அணி சேர்ந்துவிட்டோம். மனமாச்சர்யங்களைக் கடந்து ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். தி.மு.க-வை வீழ்த்த வேண்டும்’ என்று மத்திய அரசையோ, பா.ஜ.க-வையோ பெயருக்குக்கூட எடப்பாடி தன் பேச்சில் தொட்டுக்கொள்ளவில்லை. இதனால் பாஜக உடனான உறவு குறித்து இன்னும் ஒரு நிலையான முடிவு எட்டவில்லை என்பதும் தெளிவாகிறது.

எனவே ஆர்.எஸ்.பாரதி பேசி இருக்கும் இந்த கருத்தை சாதாரணமாக கடந்து செல்லாமல், இரு கட்சிகளும் சுய பரிசோதனை செய்து கொள்வது, இரு கட்சியின் தலைமைகளுக்கு மட்டுமல்ல, கீழ் நிலை தொண்டனின் மன குழப்பத்துக்கும் வழி கிடைக்கும்” என்கிறார்கள் தமிழக அரசியலை உற்று நோக்கும் அரசியல் பார்வையாளரகள்.

மதுரை அ.தி.மு.க மாநாடு

இவ்விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “திமுக தேய்ந்து வருகிறது, ஓய்ந்து வருகிறது, காய்ந்த மரமாகிவிட்டது, பட்டுப்போய்விட்டது என்பதற்கு மிகச்சரியான பதில் இது. முழுக்க முழுக்க ஒத்து போகாத இருவரான திமுக, அதிமுக பிரிந்து போன பிறகு பகையாளிகளாகத்தான் பார்த்து கொண்டார்கள். கொள்கை முரணானது. எல்லா வகை செய்கைகளிலும் மாறி இருந்தார்கள்.

இப்போது பாஜக-வின் யாத்திரை, அண்ணாமலையின் எழுச்சியினால் திமுக என்கிற கட்சியே காணாமல் போகும் என்பதால், பெரிய பெரிய அபசகுணங்களை திமுக பார்த்து கொண்டிருக்கிறது. அந்த தோல்வியை, வீழ்ச்சியை, ஏமாற்றத்தை மறைப்பதற்கு, ‘நாங்கள் அதிமுக-வுக்கு பகையாளிகள் இல்லை’ என்று இப்போதே துண்டு போட்டு வைக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. பாவம்… பரிதாபம்” என்றவர், அதிமுக., பாஜக உறவு குறித்து பேசினார்.

“பாஜக., அதிமுக இரண்டும் தனி தனி கட்சிகள். தனி தனி கொள்கைகள். தனி தனி செயல்பாடுகள், வேறுபாடுகள். தேர்தலுக்கான கூட்டு. அதில் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒன்றுபட்ட கட்சிகளுக்குள்ளேயே ஆயிரம் வேறுபாடுகள் வைத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இரண்டும் வேறு வேறு கட்சிகள் எனும் போது சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படி இருந்தால் தான் தனி தனி கட்சிகள். இல்லையென்றால் ஒரே கட்சி. அதிமுக-வை, பாஜக-தான் பிரித்தது என்கிற விமர்சனத்துக்கு பல முறை எங்கள் தரப்பில் பதில் கூறப்பட்டுவிட்டது. அதையும் தாண்டி எங்களுக்குள் இருக்கும் உறவை பிரிக்க தொடர்ந்து இது போல் பேசி கொண்டிருப்பது, அவர்களது அறியாமை” என்றார்.

எஸ்.ஆர்.சேகர்

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், இவ்விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசுகையில், “எங்கள் தலைவர்களான புரட்சி தலைவரும், புரட்சி தலைவியும் ‘தீயவர்கள்…’ என திமுக-வை அடையாளம் காட்டி சென்றிருக்கிறார்கள். அதனால்தான் வாழ்நாள் முழுவதும் திமுக-வால் தலைவர் காலத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதே நிலைதான் அம்மா ஆட்சியிலும் தொடர்ந்தது. பத்துவருடம் வனவாசமாக அம்மா, திமுக-வை வீட்டுக்கு அனுப்பினார்கள். அதனால் எங்களுக்கு எப்போதும் தீய சக்தி திமுக-தான். எங்கள் தலைவர்களின் எண்ணப்படிதான் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் நடப்போம். எங்களுக்கு ‘பங்காளி…’ என்கிற பேச்சுக்கே இடமில்லை. என்றும் பகையாளிதான் திமுக” என்றவரிடம், ’எங்களுக்கு பகையாளி பாஜக-தான்’ என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறாரே’ என்கிற கேள்வியை முன் வைத்தோம்.

“பாஜக-வை பொறுத்தவரை எங்களின் தோழமை. இப்போது ‘பாஜக எங்கள் பகையாளி’ என்று சொல்லும் திமுக 1998-ல் தோழமை போட்டு ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்து கோடி கோடியாக கொள்ளையடித்தவர்கள் தானே. அதேநேரத்தில் பாஜக-வின் சித்தாந்தம், கொள்கை வேறு. எங்களின் சித்தாந்தம், கொள்கை வேறு” என்று அதிமுக, பாஜக உறவு குறித்து பேசியவர், ‘அதிமுக-வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது’ என்றார்.

ஜெயக்குமார்

இது குறித்து விரிவாக பேசிய டி.ஜெயக்குமார், “அன்றைக்கு திமுக-விலிருந்து பிரிந்து கட்சி ஆரம்பிக்கும் போது, எம்.ஜி.அரை அழிக்க நினைத்தது திமுக. ஆனால், அது முடியவில்லை. அதனை தொடர்ந்து தலைவருக்கு பிறகு அம்மா பொறுப்பேற்ற போதும் அழிக்க நினைத்தார்கள். அதுவும் முடியவில்லை. இப்போது எடப்பாடியார் தலைமை ஏற்றிருக்கும் போதும் சில சதி வேளைகளால் அதை தொடர்ந்தார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்று கட்சி ஒன்றுபட்டு இரண்டு கோடி தொண்டர்களை பெற்று வலுவாக இருக்கிறது. அந்தவகையில் நாங்கள் ‘எந்த கொம்பனாலும்…’ என்று பறைசாற்றியது திமுக-வைத்தான். இந்த கொம்பன் மட்டுமல்ல, வேறு எந்த கொம்பன் வந்தாலும் அதிமுக-வை கிஞ்சித்தும் கூட அசைத்து பார்க்க எவனாலும் முடியாது” என்றார்.

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *