கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி கல்யாண் பானர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரைப் போல மிமிக்ரி செய்ததும், அதைக் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செல்போனில் வீடியோ எடுத்ததும் பா.ஜ-வினரால் விமர்சிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ஆகியோர் எதிர்க்கட்சியினரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். மிமிக்ரி விவகாரம் அவமரியாதைப் பற்றியதல்ல. இது அரசியலாக்கப்படுகிறது. ராகுல் காந்தி மட்டும் வீடியோ எடுக்காமலிருந்திருந்தால், இது இவ்வளவு பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டிருக்காது. இது முழுக்க முழுக்க அரசியல்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது மக்களவைத் தொகுதியான செராம்பூரில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, “நான் செய்த நகைச்சுவையை ரசிக்கும், அதைப் புரிந்துகொள்ளும் பண்பட்ட மனம் அவர்களிடம் இல்லை. அதனால்தான் இது அவமானகரமானது எனத் தெரிவித்திருக்கிறார்கள். நான் நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் மிமிக்ரி செய்தேன். ஆனால், நாடாளுமன்றத்துக்குள்ளேயே, சபாநாயகர் இருக்கும்போதே, அவரைப்போல மிமிக்ரி செய்த முதல் நபர் மோடிதான்.

அப்போது நாங்கள் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு, சிரித்தோம். அதில் என்ன அரசியல் செய்யலாம் என்றெல்லாம் சிந்திக்கவில்லை. மிமிக்ரி என்பது ஒரு கலை. ஒருவருக்கு அந்தக் கலை புரியவில்லை என்றால், நான் என்ன செய்ய முடியும்? நான் செய்த மிமிக்ரி குறிப்பிட்ட நபருடையது என ஏன் கருதவேண்டும்… இது எனக்குப் புரியவில்லை. குழந்தையைப் போல அதை நினைத்துக்கொண்டு, இரவு பகலாக ஏன் அழுகிறார்…?
நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகள், அந்த விவசாயியின் மகனைப் போலச் சொத்துக்களைக் குவிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். விவசாயியின் மகன் என்கிறார்கள். ஆனால்,ரூ.20 லட்சம் மதிப்புள்ள சூட் அணிந்திருக்கிறார்கள். இந்தக் குளிர்காலத்தில் பல இந்திய விவசாயிகளுக்கு ஒரு போர்வை கூட வாங்க முடியாது. இவ்வளவு உயர்ந்த பதவியில் இருக்கும் எத்தனை லட்சம் போர்வைகளை விவசாயிகளின் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறீர். தயவு செய்து மக்களிடம் சொல்லுங்கள்.
விவசாயி மகன் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் வக்கீலாக பணியாற்றிய காலத்தில் எத்தனை முறை விவசாயிகளுக்காக வழக்கு தொடர்ந்து போராடியிருக்கிறீர்கள்?. ஆனால், நான் கடந்த 40 வருடங்களாக ஏழைகளுக்காகப் போராடிவருகிறேன். எதிர்க்கட்சிகளின் குரல்களை நெரித்து, மோடியை இந்த நூற்றாண்டின் ‘மகாபுருஷ்’ என்று சொல்கிறீர்கள் என்றால், நீங்கள் அவரை எவ்வளவு புகழ்ந்து பேசுகிறீர்கள் என்பது தெளிவாகிறது. ஆனால், பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களின் போராட்டத்துக்குத் துணைக் குடியரசுத் தலைவர் ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
