விவாகரத்து பெறும்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பணம் மற்றும் சொத்துகளை வாங்கிக்கொண்ட பிறகு, கணவருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மனைவி மீறியதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. புனேவைச் சேர்ந்த ஒரு தம்பதி, கடந்த 2007இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பிள்ளை இருக்கிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு கணவர், மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஒருவர் நியமனம் செய்யப்பட்டார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, கணவர் ஒரே தவணையாக 12 லட்சம் பணம் மற்றும் ஒரு வீட்டை மனைவிக்குக் கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.
அதோடு கணவரின் தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் மனைவியின் பெயரை சேர்க்கவும் கணவர் ஒப்புக்கொண்டார். அதே நேரம், கணவர் மீது கொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெறவும், குழந்தையை பார்க்க அனுமதிக்கவும் மனைவி ஒப்புக்கொண்டார். ஆனால், ஒப்பந்தப்படி மனைவி வழக்கை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து, ஒப்பந்தத்தின்படி நடக்க உத்தரவிட கோரி, கணவர் தரப்பில் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். அப்போது, கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது மனுதாரர் தரப்பில் ஒப்புக்கொண்ட அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாகக் குறிப்பிட்டார். மனைவி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் ஒப்பந்தம் செய்து கொண்ட படி தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் மனைவி பெயரை சேர்க்கவில்லை என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், “இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கணவரிடமிருந்து அனைத்து சலுகைகளையும் மனைவி பெற்றுக்கொண்டார். எனவே, ஒப்புக்கொண்ட விதிகளை மீற முடியாது. இரண்டு மாதத்தில் ஒப்பந்தத்தில் செய்துகொண்ட விதிகளை நிறைவேற்றாவிட்டால், கணவரிடமிருந்து பெற்றதை மனைவி திரும்பக் கொடுக்க வேண்டும்” உத்தரவிட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com