நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு, கடந்த 9-ம் தேதி தனது நண்பர்களுடன் இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். இமயமலை பயணத்திலிருந்து திரும்பியவர், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். அங்குள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டதற்கு இடையே ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்தில் துறவிகளைச் சந்தித்தார். இதன் பின்னர், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலையும் லக்னோவில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ரஜினிகாந்த்.
இதனையடுத்து லக்னோ விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசியவர், “முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படம் பார்க்க இருக்கிறேன்” என தெரிவித்தது தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியது. ஆனால், திட்டமிட்டபடி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் படம் பார்க்கவில்லை. அதற்கு மாற்றாக, உத்திர பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதன்பின் அன்று மாலையே முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். தன்னைவிட வயதில் இளையவரான யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்தது விமர்சனத்துக்குள்ளானது.
இதற்கு, ‘முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசியல்வாதியாக தற்போது அறியப்பட்டாலும், அவரை இந்து மத துறவியாகவே ஆன்மிகவாதிகள் பார்க்கின்றனர். அதோடு கோரக்நாத் மடத்தின் தலைமை மடாதிபதியாக உள்ள அவரது காலில் வயது வித்தியாசம் இன்றி பக்தர்கள் விழுவதை போன்றே ரஜினிகாந்த் விழுந்து இருக்கிறார்’ என்று விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக ஆதரவாளர்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் சென்னை திரும்பிய ரஜினியும் கிட்டத்தட்ட இதே கருத்தை விளக்கமாக முன்வைத்தார். பின்னர் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டி வரும் இடத்தையும் சென்று வழிப்பட்டார் ரஜினி.
இதனிடையே, யோகி ஆதித்யநாத்தை அடுத்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் சந்தித்தார் ரஜினிகாந்த். இந்த சந்திப்புக்கு பின், ‘நான் மைசூரில் என்ஜினியரிங் படித்தபோது பெரிய திரையில் ரஜினிகாந்த்-ஜியை பார்த்து சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷம் இன்றும் அப்படியே இருக்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அவரை முதல் முறையாக நேரில் சந்தித்தேன். அதில் இருந்து இதுவரை நண்பர்களாக இருக்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார் அகிலேஷ் யாதவ்.
“ரஜினிகாந்த்தின் இமயமலை பயணம், கோயில் தரிசனங்கள், அரசியல் பிரமுகர்கள் சந்திப்புக்கள் என்று அரசியல் கலந்த இந்த ஆன்மிக பயணத்தின் மூலம் மீண்டும் அவரை அரசியல் லைம் லைட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது பாஜக” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் சிலர். மேலும் தொடர்ந்தவர்கள்,
தொடர்ந்து ரஜினியின் அரசியல் நகர்வுகளை கண்காணித்து வரும் சிலர், “1996-ல் இருந்தே அரசியலில் ஏதோ ஒரு வகையில் தன்னை ஒரு பேசு பொருளாக வைத்து கொண்டு வரும் ரஜினிகாந்த, 2014-ம் ஆண்டு அதன் உட்ச நிலையை அடைந்தார். அதாவது, 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி அலை நாடு முழுவதும் வீசி கொண்டிருந்த வேளையில், பிரசாரத்தின் போது தமிழகம் வந்த மோடி, சென்னையில் திடீரென்று போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். அப்போது, `தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து’ தெரிவித்ததாக மோடி கூறினார். மோடிக்கு ரஜினியும் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்களுடன் ரஜினிகாந்த் நெருக்கம் பாராட்டி வந்தாலும், எந்த ஒரு அரசியல் கட்சியிலும் தன்னை நேரடியாக இணைத்து கொள்ளவில்லை. ஆனால், மோடி சந்திப்புக்கு பிறகு அவரது அரசியல் பாஜக-வுக்கு ஆதரவானதாக இருக்கும் என்பதை தெளிவுப்படுத்தும் வகையில், தன் அரசியல் பயணம், ‘ஆன்மிக அரசியல்’ என்பதை பறைசாற்றினார். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களின் கொள்கையை எங்கும் பேசாதவர், பாஜக-வின் கொள்கையோடு ஒத்து போவதை வெளிப்படுத்தினார்.
இதன் அடுத்தக்கட்டமாக, துக்ளக் இதழின் 48-வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ‘ரஜினியும், பாஜக-வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். தமிழக அரசியலில் ரஜினிக்கு மிகச்சிறந்த வாய்ப்பு இருக்கிறது’ என்றார். தொடர்ந்து நரேந்திர மோடியின் அரசு திட்டங்களுக்கு வரவேற்பையும் அவ்வப்போது தெரிவித்து வந்தார். அந்த வகையில், நாடே எதிர்ப்பு தெரிவித்த பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதும், பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்.
அதே சமயத்தில், ஒவ்வொருமுறையும் பாஜக தங்கள் பக்கம் ரஜினியை இழுக்கும் போதும் சரி, அதை ரஜினிகாந்த் எதிர்கொண்டபோதும் சரி, பாஜக தலைவர்கள் யாரையுமே அவர் பகைத்து கொள்ளவில்லை. அரசியலில் இருந்து அவர் ஒதுங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், இப்போதைய செயல்பாடுகளால் மீண்டும் தேசிய அளவில் அரசியலில் கவனம் பெற்றுள்ளார் ரஜினிகாந்த்” என்கிறார்கள்.
“இதை அரசியல் பயணமாக பார்ப்பதும், ஆன்மீக பயணமாக பார்ப்பதும் பார்ப்பவர்களது பார்வை பொறுத்தது” என்கிறார் பாஜக மாநில செயலாளர் அஸ்வதாமன். மேலும் தொடர்ந்தவர், “ஒவ்வொரு இந்திய குடிமகனும் விரும்புகிற முக்கிய தலைவர்களாக பாஜக-வின் தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த விதத்தில் ரஜினிகாந்த் பாஜக தலைவர்களை சந்தித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக யோகி ஆதித்யநாத் பலராலும் விரும்பப்படுகின்ற ஒரு நபராக இருக்கிறார். பின் தங்கிய மாநிலமாக இருந்த உத்திர பிரதேசத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார். இப்படிப்பட்டவர் காலில் ரஜினிகாந்த் விழுந்ததை நிறைய பேர் விமர்சிக்கிறார்கள்.
யோகியை பார்க்கும் போது ஒரு அரசியல்வாதியை பார்க்கும் அனுபவம் இருக்காது. அவரை சந்திக்கும் போது அரசியல் தலைவரை சந்தித்த உணர்வை விட ஆன்மிக தலைவரை சந்தித்த உணர்வுதான் கொடுக்கும். அதுதான் ரஜினிகாந்துக்கும் கொடுத்திருக்கிறது” என்றார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “2024-ல் ரஜினி எடுக்கும் முடிவை வைத்துத்தான் இது அரசியலா, ஆன்மிகமா என்பது முடிவாகும். அவர் களத்துக்குள் வர வேண்டும், மோடிக்காக பிரசாரம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை தாண்டி அகிலேஷ் யாதவ், பினராய் விஜயன், சரத் பவார் போன்றவர்களிடமும் நல்ல மரியாதை இருக்கிறது அவருக்கு. இதெல்லாம் இருந்தாலும் என்ன செய்ய போகிறார் என்கிற முடிவு அவர் கையில் இருக்கிறது. பாஜக தலைவர்கள் அவர் பிரசாரம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும், எல்லாம் அவர் கையில்தான் இருக்கிறது” என்றார்.
“பாஜக என்கிற கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் ஒரு புதிய முகம் தேவைப்படுகிறது. அதனால்தான், யோகி வளர்த்தெடுக்கப்படுகிறார். எனவேதான் யோகி தேசிய அளவில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறார். அந்தவகையில் தமிழ் நாளேடுகளில் விளம்பரம் செய்வது, தமிழரான ஒரு சுதந்திரப் போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழில் ட்விட்டரில் பதிவிடுவது, எனக் களமிறக்கப்பட்டிருக்கிறார் யோகி ஆதித்யநாத். உத்தரப்பிரதேசத்தை தாண்டி மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களில் சுமார் 200 நாடாளுமன்றத் தொகுதிகளில் தன் செல்வாக்கை வளர்க்க ஆரம்பித்திருக்கும் யோகியை, தென்னிந்தியாவிலும் பிரபலப்படுத்தும் வேலையும் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக வரும் நாள்களில் யோகியை முன்னிலைப்படுத்தி, தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்போது ரஜினிகாந்தின் சந்திப்பும் அதற்கு ஒரு கூடுதல் பலம் சேர்க்கும்” என்கிறார்கள் ஆர்.எஸ்.எஸின் முக்கிய புள்ளிகள் சிலர்.
நன்றி
Publisher: www.vikatan.com