உத்தராகண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, உத்தரகாசியிலுள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைப்பதற்கு சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சார்தாம் சாலை திட்டத்தின் ஒருபகுதியாக, உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கி.மீ அளவுக்கு குறைக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் நவம்பர் 12-ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. அதனால், கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த பாதை சரிந்து விபத்து ஏற்பட்டது. 4.5 கி.மீ நீளமுள்ள அந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் தூரம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில், சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த 40 தொழிலாளர்கள் சிக்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு, ஆக்ஸிஜன் ஆகியவற்றை குழாய் மூலமாக கொடுத்து வருகிறார்கள். ஆனாலும், சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்படுவதால், அந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினரும் சக தொழிலாளர்களும் நேற்று (நவ. 15) போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘மீட்புப்பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களைச் செலுத்தி தொழிலளார்களை மீட்பதற்கான புதிய இயந்திரத்தை உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மீட்புப்பணியில் 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். மீட்புப்பணியை வேகப்படுத்துவதற்காக விமானப்படையின் உதவியுடன் பணிகள் நடைபெற்று வருவதாக உத்தராகண்ட் மாநில காவல்துறை டி.ஜி.பி கூறியிருக்கிறார்.
இடிபாடுகளுக்குள் குழாய்களை நுழைத்து அதன் வழியாக தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதற்கான பணிகளைப் பார்வையிட்ட உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ரூகேலா, ‘துளையிடும் இயந்திரத்தின் உதவியுடன் குழாய்களை இடிபாடுகளுக்கு உள்ளே செலுத்தி, தொழிலாளர்களை மீட்பதற்கான பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால், உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்’ என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கூறினார். மீட்புப்பணிகள் தொடரும் நிலையில், புதிதாக மண்சரிவு ஏற்படுவதால் பெரும் இடையூறு ஏற்படுகிறது என்ற அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
மீட்புக் குழாய் பாதையில் பெரிய பாறை ஒன்று அடைத்துக்கொண்டிருக்கிறது. எனவே, புதிதாக ஒரு மீட்புக் குழாயை உள்ளே செலுத்துவதற்காக டெல்லியிலிருந்து கனரக இயந்திரம் ஒன்று வரவழைக்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
நிலச்சரிவு, பூகம்பம், வெள்ளம் ஆகியவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சூழலியலாளர்களால் எச்சரிக்கப்பட்டதுதான் இந்த மலைப்பிரதேசம். அவ்வளவு ஆபத்து மிகுந்த இந்த மலைப் பகுதியில் காங்கிரீட் கட்டுமான நடவடிக்கைகள் வரைமுறையின்றி நடைபெறுவதாக ஏராளமான புகார்கள் எழுந்திருக்கின்றன.
தற்போது விபத்து நிகழ்ந்திருக்கும் சுரங்கப்பாதைத் திட்டம் குறித்தும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த சுரங்கப்பாதை அமைப்பும் வழித்தடத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்த காரணத்தால், சில பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்தப் பணி முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், 2024-ம் ஆண்டு மே மாதம் வரை இந்தப் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், சுரங்கப்பாதையில் விபத்து நிகழ்ந்திருக்கிறது. விபத்து ஏற்பட்டு இன்றுடன் (நவ. 16) ஐந்து நாட்களாகின்றன. மீட்புப்பணிகள் நடைபெறும் இடத்துக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வி.கே.சிங் சென்று பார்வையிட்டார். அப்போது, மீட்புப்பணிகள் நிறைவடைய இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம் என்றார் அவர். அதுவரையிலும் உள்ளே சிக்கி இருப்பவர்களின் நிலை குறித்து தான் அனைவரும் கவலையும். மத்திய, மாநில அரசுகள் மீட்புப் பணியில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com