திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை சந்திப்புக்கு அருகே, கால்வாய் ஒன்று இருக்கிறது. ரயில்வே கழிவறைக் கழிவுகளும், ரயில் நிலையத்திலிருந்து வரும் கழிவுகளும் இந்தக் கால்வாய் வழியாக அருகேயுள்ள ஏலகிரி ஏரியில் கலக்கின்றன. கடந்த சில வாரங்களாக இந்தக் கால்வாயில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கால்வாயில் குவியல் குவியலாக நெகிழிப் பைகளும் குப்பையுமாகக் காட்சியளிக்கின்றன.
இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, “ஜோலார்பேட்டை சந்திப்புக்கு அருகேயுள்ள கழிவுநீர் கால்வாய் ஆனது, ஒரு சில வருடங்களுக்கு முன்பு சிறிய கால்வாயாக இருந்தது. ஆனால், தற்போது கழிவுகள் அதிகமாக வருவதன் காரணமாக கால்வாயை அகலப்படுத்தினர். இடையம்பட்டி, ஹோட்டல் தெரு மற்றும் ரயில்வே நிலையத்திலிருந்து வரும் கழிவுகள் அனைத்தும் இந்தக் கால்வாயில் கலந்து அருகேயுள்ள ஏலகிரி ஏரியில் கலக்கிறது. இந்தக் கால்வாயில் நிரம்பி வழியும் குப்பை, கழிவு, மது பாட்டில்கள் காரணமாக ஏரிக்கரையின் அருகே அமைந்திருக்கும் நிலங்களின் தன்மையைக் கெடுத்து அசுத்தப்படுத்துகிறது” என்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு அந்தக் கால்வாயில் ரயில்வேதுறை மூலம், இயந்திரங்கள் உதவியால் கால்வாயிலுள்ள கழிவுகளும், குப்பைகளும் அகற்றப்பட்டு அந்தக் கால்வாய்க்கு அருகே குவித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிகமான குப்பைகளும், கழிவுகளும் கால்வாயில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அங்கு செல்லும் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் கால்வாய்க்கு அருகே சிறிது தொலைவில் பேருந்து நிறுத்தமும், ஆரம்ப நிலை பள்ளிக்கூடமும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அருகிலுள்ள மக்களை விசாரிக்கும்போது, “சில வாரங்களுக்கு முன்பு அந்தக் கால்வாயிலுள்ள கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றி அந்தக் கால்வாயின் அருகிலேயே கொட்டினர். ஆனால், அங்கு கொட்டப்பட்ட கழிவுகளும், குப்பைகளும் மழை, காற்றினால் மீண்டும் அதே கால்வாயில் விழுந்து விடுகின்றன” எனக் குற்றம்சாட்டினர். குப்பைகளும் கழிவுகளும் ரயில் நிலையத்திலிருந்து குவியல் குவியிலாக வந்து இங்கு தேங்குகின்றன என்றும் சாடினர்.
மேலும் அருகில் இருப்பவர்கள் மற்றும் கடைகளிலுள்ள குப்பைகளை இங்கேயே கொட்டுவதாகவும் கூறினர்.
கால்வாயிலுள்ள கழிவுகள் அருகிலுள்ள ஏலகிரி ஏரியில் கலக்கும் நிலையில், தற்போது குப்பைகளும், கழிவுகளும் அதிகமாக தேங்கிய நிலையில் காணப்படுவதால் கொசுக்கள் உருவாகும் அபாயமும், நோய்கள் பரவும் அபாயமும் இருக்கிறது.
மாநிலத்தில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலும் இருக்கும் நிலையில், கழிவுகளை அகற்றுவதோடு நிற்காமல், கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கை! கவனிக்குமா அரசு நிர்வாகம்?!
நன்றி
Publisher: www.vikatan.com